வரும் 2026ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு நிறுவனம் தனது வரவுசெலவுத் திட்டத்தில் 15 விழுக்காட்டைக் குறைப்பதற்கு அதன் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பரிந்துரைத்துள்ளார்.
இதனால், 2,681 வேலைகள் பறிபோகலாம் என்று ஐநா உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே நிதிப் பிரச்சினையால் ஐநா திண்டாடிவரும் நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கொள்கை மாற்றங்கள் அதனை மேலும் மோசமாக்கிவிட்டன.
இதனையடுத்து, அடுத்த ஆண்டிற்கான ஐநாவின் வரவுசெலவுத் திட்டம் 3.238 பில்லியன் அமெரிக்க டாலராகத் (S$4.131 பில்லியன்) திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இவ்வாண்டைப் போலவே 2026ஆம் ஆண்டிற்கும் ஏறக்குறைய 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தைத் திரு குட்டரெஸ் முன்மொழிந்திருந்தார்.
இந்நிலையில், ஐநா உறுப்பு நாடுகளுக்கும் ஐநா பணியாளர்களுக்கும் அவர் அனுப்பிய கடிதங்கள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
அதில், “வழக்கமான வரவுசெலவுத் திட்டத்தைக் காட்டிலும் 15 விழுக்காடு குறைக்கப்படுவதாக”, அதாவது கிட்டத்தட்ட 500 மில்லியன் அமெரிக்க டாலர் குறைக்கப்படுவதாக திரு குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஐநாவின் ஒட்டுமொத்த ஊழியரணியில் 19 விழுக்காட்டினர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அமைதி மற்றும் பாதுகாப்பு, மனித உரிமைகள், நீடித்த வளர்ச்சி ஆகிய ஐநாவின் மூன்று முக்கியத் துறைகளுக்கும் ஒதுக்கப்படும் தொகை குறையும் என்றும் குறைந்த வளர்ச்சிகொண்ட நாடுகளுக்கான திட்டங்களில் பாதிப்பு இருக்காது என்றும் திரு குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவிலும் நியூயார்க்கிலும் பணிபுரியும் ஐநா ஊழியர்களில் குறைந்தது 200 பேர் நைரோபி போன்ற செலவு குறைவான நகரங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதும் அம்மாற்றங்களில் அடங்கும் என்றும் அந்த ஐநா உயரதிகாரி கூறினார்.
திரு குட்டரெஸ் முன்மொழிந்துள்ள வரவுசெலவுத் திட்டமானது இவ்வாண்டு இறுதிக்குள் ஐநா பொதுச் சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்படும்.