தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களின் பின்னணியில் ஷேக் ஹசினா அரசாங்கம்

2 mins read
3cf2be97-8600-4227-9d67-a6cd3f169710
2024 ஆகஸ்ட் 5ஆம் தேதி பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசினாவின் அரண்மனையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

ஜெனிவா: பங்ளாதேஷின் முன்னாள் அரசாங்கம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களின் பின்னணியில் இருந்ததற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் (ஐநா) தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்ளாதேஷ் பிரதமர் பதவியில் ஷேக் ஹசினா இருந்தபோது அங்கு மாணவர்கள் தலைமையில் புரட்சி நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல்கள், கொலைகளின் பின்னணியில் பங்ளாதேஷ் அரசாங்கம் இருந்ததாகவும் ஐநா புதன்கிழமை (பிப்ரவரி 12) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அரசாங்கத்தை எதிர்த்துப் போராடியவர்கள் திட்டமிட்டு நசுக்கப்பட்டதாகவும் சட்டத்திற்குப் புறம்பான நூற்றுக்கணக்கான கொலைகளும் நிகழ்த்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கொலை, சித்திரவதை, சிறைவாசம், மனிதகுலத்துக்கு எதிரான பிற அத்துமீறல்கள் போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்கள் நிகழ்ந்ததை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாகவும் ஐநா மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது.

“இத்தகைய குற்றங்களை அரசாங்கமே முன்னின்று நடத்தி உள்ளது. பிரதமரின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த வன்முறையாளர்களும் பங்ளாதேஷ் பாதுகாப்பு மற்றும் உளவுச் சேவைகளும் அத்தகைய குற்றங்களுக்குத் துணைபோயின.

“போராட்டம் நடத்தியவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிராக திட்டமிட்ட, பரவலான தாக்குதல்களும் அரங்கேறின,” என்று ஐநா அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.

நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டபோதிலும் போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக பிரதமர் ஹசினா, 77, நாட்டைவிட்டுத் தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் வகையில், பங்ளாதேஷ் இடைக்கால அரசாங்கம் பிறப்பித்த கைதாணையை அவர் பொருட்படுத்தவில்லை.

திரு முஹம்மது யூனுஸ் தலைமையிலான அந்த இடைக்கால அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, போராட்டக் காலத்தில் நடந்தது என்ன என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் ஐதா மனித உரிமைக் குழு இறங்கியது.

மனித உரிமைக்குழு புலன்விசாரணை அதிகாரிகள், தடயவியல் மருத்துவர், ஆயுத நிபுணர் போன்றோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அந்தக் குழு பங்ளாதேஷுக்கு அனுப்பி வைத்து ஆராய்ந்தது.

அதன் முடிவில் ஐநா மனித உரிமைக் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளைத் திரு யூனுஸ் வரவேற்றுள்ளார்.

எல்லா மக்களும் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய ஒரு நாடாக பங்ளாதேஷை உருமாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்