சிரியா செல்கிறார் ஐநா தலைமைச் செயலாளர் குட்டரெஸ்

சிரியா செல்கிறார் ஐநா தலைமைச் செயலாளர் குட்டரெஸ்

1 mins read
52cfd45c-ef6d-42e0-afcf-beacc9d477e1
ஐநா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ருட்: ஐநாவின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், சிரியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதற்குப் பிறகு, அங்குச் செல்லும் முதலாவது ஐநா தலைமை அதிகாரி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் நீடித்த கடும் போருக்குப் பிறகு, 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அப்போதைய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அசாத்தின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

தம்முடைய இந்தப் பயணத்தின்போது, சிரியாவின் புதிய அதிபர் அகமது அல் ஷாரா, வெளியுறவு அமைச்சர் அசாத் அல் ஷைபானி, அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார் திரு குட்டரெஸ். மேலும், சிரியாவின் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகாலப் போரில் இருந்து சிரியா மீண்டு வருவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்காலத்துக்குத் தேவையான ஒரு வலுவான, நிலையான மற்றும் அமைதியான அடித்தளத்தை அமைப்பதற்கான நல்வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளதை ஐநா தலைவர் வலியுறுத்துவார் என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் டுஜாரிக் தெரிவித்தார்.

திரு குட்டரெசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், சிரியாவின் அமைதிக்கும் மறுசீரமைப்புக்கும் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்