நியூயார்க்: சிரியாவில் செயல்பட்டுவந்த கிளர்ச்சிக் குழுவான ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ (HTS) மீதான தடைகளை ஐநா பாதுகாப்பு மன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாரபூர்வமாக நீக்கியுள்ளது.
முன்னதாக அக்குழுவுக்குத் தலைமை தாங்கிய சிரியாவின் அதிபர் அகம்மது அல் ஷாரா, அதனை முறைப்படி கலைத்ததைத் தொடர்ந்து தடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில், மற்ற கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து சிரியாவின் அப்போதைய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை வீழ்த்தியபோது, ‘எச்டிஎஸ்’ அமைப்பிற்குத் திரு. ஷாரா தலைமை தாங்கினார்.
தொடக்கத்தில் பயங்கரவாத அமைப்பான ‘அல் கைய்தா’வுடன் அந்தக் குழு தொடர்பு கொண்டிருந்தது. பின்னர் அது 2016ல் அந்தத் தொடர்பைத் துண்டித்துக்கொண்டு ‘எச்டிஎஸ்’ எனப் பெயர் மாற்றம் கண்டது.
அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தைத் தொடர்ந்து, சென்ற ஆண்டில் (2025) அதிபர் ஷாரா மீதான தனிப்பட்ட தடைகளை ஐநா பாதுகாப்பு மன்றம் நீக்கியது.

