காபூல்: தலிபான் ஆட்சியின்கீழ் இருக்கும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தவேண்டாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா), நன்கொடையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் பெண்களுக்குகான நிலைமை உலக அளவில் ஆக மோசமானதாகும் என்று சுட்டிய ஐநா, உதவி இல்லாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்று எச்சரித்தது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு மீண்டும் ஆட்சிக்கு வந்த தலிபான்
ஆப்கானிஸ்தானில் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், அங்கு பெண்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை நிலைமை மோசமடைந்த வண்ணம் இருக்கிறது.
அப்படியிருக்கையில், அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் நிதியுதவியில் பற்றாக்குறை இருந்துவருவதால் கடந்த ஏப்ரல் மாதம் கருத்தாய்வில் பங்கேற்ற 74 மாதர் அமைப்புகளில் பாதிக்கும் மேல் செயல்படுவதை அடுத்த ஓராண்டில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்தவேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்கான தேவை ஆக அதிகமாக இருக்கும்போது அந்நிலை உருவாகும் என்று ஐநாவின் பெண்களுக்கான சிறப்புப் பிரதிநிதி சூசன் ஃபெர்கசன் குறிப்பிட்டார்.
ஆட்சிக்கு வந்த பிறகு தலிபான் அமைப்பு பெண்கள் உரிமைகளைத் தடுக்கும் விதத்தில் 100க்கும் மேற்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக ஃபெர்கசன் தெரிவித்தார். அதனால், பெண்களின் அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். கல்வி, வேலை, சுதந்திரமாக நடமாடுதல் உள்ளிட்ட அம்சங்கள் அவற்றில் அடங்கும்.
எடுத்துக்காட்டாக, உயர்நிலைப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர முடியாது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்க, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்டவை அடங்கும் 56 நாடுகள் கூட்டணி, பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அகற்றுமாறு மறுபடியும் கோரி ஐநாவிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து திருவாட்டி ஃபெர்கசன் பேசினார்.
ஆப்கானிய பெண்கள் கூறுவது
ஐந்தாண்டு தலிபான் ஆட்சியில் தங்களின் வாழ்க்கை அடையாளம் தெரியாத வகையில் மாறிவிட்டதாக ஆப்கானிய பெண்கள் சிலர் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள 22 மில்லியன் பெண்களின் உரிமைகள் தலிபானால் பறிக்கப்பட்டுவருவவதாக பிபிசி குறிப்பிட்டது.
அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணி, தலிபானை ஆட்சியிலிருந்து கவிழ்த்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2021ல் அந்த அமைப்புதலிபான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.


