தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உதவிக்காக $63 பில்லியன் நன்கொடை நாடும் ஐநா

2 mins read
2b814621-4fc7-4563-bf66-6d2c8a5890d8
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) ஓசிஎச்ஏ அமைப்புத் தலைவர் டாம் ஃபிலெட்சர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனிவா: உதவிக்கரம் நீட்டுவதற்காக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா), 47 பில்லியன் டாலர் ($63.17 பில்லியன்) நன்கொடையை நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரிலிருந்து தப்பியோடுவோர், பட்டினியால் அவதிப்படுவோர் ஆகியோர் சுமார் 190 மில்லியன் மக்களுக்கு 2025ஆம் ஆண்டில் உதவ ஐநா அத்தொகைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாண்டின் உதவிப் பணிகளுக்காக கேட்கப்பட்ட தொகையில் ஐநா பாதிகூடப் பெறவில்லை. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஐநாவுக்கு அளிக்கும் நன்கொடையின் அளவு குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் 2025ஆம் ஆண்டுக்காக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐநாவுக்கு ஆக அதிக நன்கொடை வழங்கும் நாடாகும்.

உலகளவில் பலர் இதுவரை இல்லாத அளவு அவதிப்படுவதாக புதிய ஐநா தலைவர் டாம் ஃபிளெட்சர் வருணித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான், சிரியா, உக்ரேன் உட்பட 32 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த ஆண்டு உதவிக்கரம் நீட்ட ஐநா எண்ணம் கொண்டுள்ளது.

“உலகம் ‘தீப்பிடித்து எரிகிறது’. அதை இப்படித்தான் அணைக்க வேண்டும்,” என்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் திரு ஃபிலெட்சர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

“இவ்வுலகில் ஆக அதிக தேவை இருப்போருடனான உறவை நாம் புதிதாகத் தொடங்கவேண்டும்,” என்றார் முன்னாள் பிரிட்டி‌ஷ் அரசதந்திரியான திரு ஃபிளெட்சர். ஐநாவின் மனிதநேய விவகார ஒருங்கிணைப்பு அமைப்பின் (OCHA - ஓசிஎச்ஏ) தலைவராக அவர் சென்ற மாதம் பொறுப்பேற்றார்.

ஓசிஎச்ஏ, அடுத்த ஆண்டுக்காக வேண்டுகோள் விடுத்த தொகையைவிட அதிகமான தொகையை இதுவரை மூன்று முறைதான் கேட்டிருக்கிறது. அப்படியிருந்தும் ஏறக்குறைய 115 மில்லியன் மக்களுக்கு அந்த அமைப்பால் உதவ முடியாமல் போகும் என்று திரு ஃபிளெட்சர் குறிப்பிட்டார். அவர்களின் தேவைகளை ஓசிஎச்ஏ பூர்த்தி செய்வது சாத்தியமில்லாதது அதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐநா, இவ்வாண்டுக்காக வேண்டுகோள் விடுத்த நன்கொடைத் தொகையைக் குறைத்துக்கொண்டது. அது, இவ்வாண்டு 46 பில்லியன் டாலர் நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டது. 2023ல் அத்தொகை 56 பில்லியன் டாலராக இருந்தது.

குறிப்புச் சொற்கள்