தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனித உரிமை மீறல் குறித்து விசாரணை: பங்ளாதே‌ஷ் செல்லும் ஐநா குழு

2 mins read
eacbe7c9-3c94-4325-a3ce-c7e3631b599e
பங்ளாதே‌ஷைப் புரட்டிப்போட்ட ஆர்ப்பாட்டங்களில் 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

டாக்கா: பங்ளாதே‌ஷின் இடைக்கால அரசாங்கத்தின் கோரிக்கைக்கேற்ப விசாரணைக் குழு ஒன்றை அந்நாட்டுக்கு அனுப்பப்போவதாக ஐக்கிய நாட்டுச் (ஐநா) சபையின் மனித உரிமை அலுவலகம் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) அறிவித்தது.

பங்ளாதே‌ஷில் அண்மையில் பலரைப் பலிவாங்கிய கலவரத்தில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து தகவல்களைக் கண்டறிய ஐநா குழு ஒன்று அந்நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளது.

பங்ளாதே‌ஷ் கலவரத்தில் 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இம்மாதம் ஐந்தாம் தேதியன்று திருவாட்டி ‌ஷேக் ஹசினா பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவுக்குத் தப்பியோடினார்.

அவர் தப்பியோடிய பிறகும் வன்முறை சில நாள்களுக்குத் தொடர்ந்தது.

பிறகு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பாதுகாப்புப் படைகள் ஆர்ப்பாட்டங்களை அடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செய்தனர்.

“வரும் வாரங்களில் (ஐநா மனித உரிமை மீறல் அலுவலகம்) பங்ளாதே‌ஷுக்குத் தகவல்களைக் கண்டறியும் குழு ஒன்றை அனுப்பும். ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்றிருக்கக்கூடிய விதிமீறல்கள், தவறான நடத்தை ஆகியவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதோடு வருங்காலத்தில் நீதியை மேம்படுத்தி பொறுப்பேற்கச் செய்ய வகைசெய்யும் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வழிவகுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்,” என்று ஐநா மனித உரிமை அலுவலகத்துக்கான பேச்சாளர் ரவீனா ‌ஷாம்தசானி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மாதம் 22லிருந்து 29ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஐநா குழு ஒன்று பங்ளாதே‌ஷுக்குச் சென்றது. அப்போது அக்குழு அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெறுபவர்கள் உள்ளிட்டோரைத் தொடர்புகொண்டது.

அதனையடுத்து மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த ஐநா குழு பங்ளாதே‌‌ஷுக்கு அனுப்பப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்