அபராதம் செலுத்த முடியவில்லை; சிறையில் தொடரும் நஜிப்

அபராதம் செலுத்த முடியவில்லை; சிறையில் தொடரும் நஜிப்

படம்: ஏஎஃப்பி

20 Sep 2026 - 4:29 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது வழக்கறிஞர் குழுவினர், அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனையுடனான மன்னிப்பின் விதிமுறைகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

நஜிப் வீட்டுக் காவலுக்கு மாற வேண்டுமானால், அதற்கு முன்னதாக 50 மில்லியன் ரிங்கிட் (S$15.6 மில்லியன்) அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் தொடர்ந்து காஜாங் சிறையிலேயே இருந்து வருகிறார்.

செப்டம்பர் 20ஆம் தேதி நஜீப் சார்பில் ‘ஷஃபீ & கோ’ சட்ட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அவர் வீட்டுக் காவலுக்கு மாறுவது மன்னிப்புச் சட்டத்தின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதைப் பொறுத்தே அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நஜிப்பின் சொத்துகள், வங்கிச் கணக்குகள் மற்றும் பிற உடைமைகளில் கணிசமான பகுதிகள் அரசாங்கத்தின் முடக்க உத்தரவுகளுக்கும் அமலாக்க நடவடிக்கைகளுக்கும் உட்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“தற்போது இந்தச் சொத்துகளை விற்பனை செய்வதும் கையாள்வதும் நஜிப்பின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, இந்த நிபந்தனையை நிறைவேற்றும் திறன் அவரது சொந்தக் கட்டுப்பாட்டில் இல்லாத பிற விவகாரங்களைச் சார்ந்தே உள்ளது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பிரதமரும் அம்னோ கட்சியின் தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான அகமது ஸாஹிட் ஹமிடி, அம்னோ உச்சமன்றம், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தனக்கு உறுதுணையாக இருப்பதற்கு நஜிப் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், நிபந்தனையை நிறைவேற்ற உதவ முன்வந்த மலேசியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இருப்பினும், அம்னோ உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் தமக்கு உதவுவதை ஒரு கட்டாயமாக உணர வேண்டாம் என்று நஜிப் கேட்டுக்கொண்டார்.

தமக்குத் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வரும் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தமது குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரங்களுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அவரது சட்டக் குழுவினர் தற்போது கூடுதல் கருத்துகள் எதுவும் தெரிவிக்க மாட்டார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 18) கூட்டரசுப் பிரதேச பொது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், நஜிப்புக்கு நிபந்தனையுடனான மன்னிப்பை வழங்கி, எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி அளித்தார்.

இதற்கிடையே, நஜிப் சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்படும் பட்சத்தில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எளிதாக்கும் வகையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் லங்காக் டூத்தாவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு அருகே திங்கட்கிழமை (செப்டம்பர் 21) முதல் தற்காலிகக் காவல் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

நஜிப் தமது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பாரானால், அவரைக் கண்காணிக்கும் பொறுப்பு சிறைத்துறையைச் சாரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாநஜிப் ரசாக்சிறைஅபராதம்