தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்ட சிறுவன்

1 mins read
e2ecf682-16bd-47e6-aba9-be4d8ee8f9a3
நிகழ்ந்த தவற்றுக்காக ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. - படம்: ஊடகம்

நியூயார்க்: தனியாகப் பயணம் செய்த சிறுவனை வேறு நகருக்குச் சென்ற விமானத்தில் ஏற்றி அனுப்பிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்தது.

ஃபுளோரிடாவின் ஃபோர்ட் மயர்ஸ் நகரிலுள்ள தன் பாட்டியைப் பார்ப்பதற்காகக் கடந்த வியாழக்கிழமை ஃபிலடெல்ஃபியாவில் இருந்து கிளம்பினான் கேஸ்பர் என்ற அந்த ஆறு வயதுச் சிறுவன்.

ஆனால், ஃபோர்ட் மயர்சுக்குச் செல்லும் விமானத்திற்குப் பதிலாக ஆர்லாண்டோ சென்ற ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டான் கேஸ்பர்.

பேரனை வரவேற்பதற்காக ஃபோர்ட் மயர்சில் காத்திருந்த மரியா ராமோஸ் என்ற அவனுடைய பாட்டி, விமானம் தரையிறங்கி வெகுநேரமாகியும் அவன் வராததால் பதற்றமடைந்தார்.

“விமானத்திற்குள் ஓடிச் சென்று, ‘எங்கே என் பேரன்? ஃபிலடெல்ஃபியாவில் அவன் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டானே?’ என்று அங்கிருந்த விமானப் பணியாளரிடம் கேட்டேன்,” என்றார் மரியா.

அதற்கு, “எந்த ஒரு சிறுவனும் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை,” என்று அப்பணியாளர் சொன்னதாக அவர் குறிப்பிட்டார்.

நல்ல வேளையாக, ஆர்லாண்டோவில் விமானம் தரையிறங்கியதும் கேஸ்பர் தொலைபேசி வழியாகத் தன் பாட்டியைத் தொடர்புகொண்டான்.

அதன்பின் ஃபோர்ட் மயர்சிலிருந்து 260 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆர்லாண்டோவிற்கு காரிலேயே சென்று, தன் பேரனை அழைத்து வந்தார் மரியா.

இத்தவற்றுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ், கேஸ்பரை அழைத்துவர மரியாவிற்கு ஆன செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்