தோக்கியோ: மூத்தோர் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் ஜப்பானும் ஒன்று. மேலும் அது வேகமாக மூப்படைந்து வரும் நாடாகவும் உள்ளது.
அண்மைக் காலமாக அங்கு மூத்தோர் மரணமடையும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. 2024ஆம் ஆண்டில் மட்டும் ஜப்பானில் 1.6 மில்லியன் மூத்தோர் மாண்டனர்.
மூத்தோர்களில் பலர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இறந்த பிறகு அவர்களின் சொத்தை எடுத்துக்கொள்ள வாரிசுகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாததால் அவை கேட்பாரற்றுப் போகின்றன.
2024ஆம் ஆண்டு தரவின்படி கிட்டத்தட்ட 1.08 பில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்துகள் கேட்பாரற்று இருந்தன. பின்னர் அதை ஜப்பானிய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டது.
2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது அந்த விகிதம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளாகக் கேட்பாரற்றுக் கிடக்கும் சொத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
ஜப்பானில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடுகளை ‘அகியா’ என்று அழைப்பார்கள். தற்போது அங்குக் கிட்டத்தட்ட 9 மில்லியன் வீடுகள் அகியாவாக உள்ளன.
இதுபோன்ற சம்பவங்கள் ஜப்பான் அரசாங்கத்திற்கு இரண்டு தலைவலிகளைக் கொடுத்துள்ளது. ஒன்று, குறைந்துவரும் மக்கள்தொகை, மற்றொன்று தனிமையில் வாடும் மூத்தோர்.
தொடர்புடைய செய்திகள்
2009ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானின் மக்கள்தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது. திருமணம் செய்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாகத் தரவுகள் கூறுகின்றன. மேலும் உறவினர்கள் இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிவருகிறது.
அடுத்த தலைமுறையினர் அல்லது வாரிசுகள் போதுமான அளவில் இல்லாமல் போனால் நாட்டில் பல சிக்கல்கள் எழும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஜப்பான் மக்கள்தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ளது. இதனால் மூத்தோர் தொடர்பான சேவைகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.
தனிமையில் உள்ள மூத்தோர் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் உள்ள உறவை வலுப்படுத்த வேண்டும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

