லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் கட்டுக்கடங்காத தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடி வரும் வேளையில் அந்த மாநிலத்தில் அவரசநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (ஜூன் 17) பிற்பகலில் 46,400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட, உறைந்த உணவுப்பொருள் கிடங்கில் தீ மூண்டது.
அந்தத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்ற வேளையில் கிடங்கிலிருந்து கசிந்த அமோனியா ரசாயனமும் உருகிய சூரிய மின்தகடுகளும் அந்தப் பணியைச் சிக்கலாக்கின.
மேலும், பலமாக வீசிய காற்றில் கரும்புகை கலந்தது.
“நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் புகை உணரப்படுகிறது. எனவே, அனைவரும் இயன்றவரை புகையின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும்,” என்று லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
கிடங்கில் எரிந்த தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டாலும் தீ இன்னும் எரிந்துகொண்டுள்ளது என்றும் தீப்புகையில் பிளாஸ்டிக் வாசனை கலந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்த மாநில அரசாங்கம் சனிக்கிழமை (ஜூன் 20) அவசரநிலையை அறிவித்தது.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் கிழக்குக் குடியிருப்பு வட்டாரமான பாய்ல் ஹைட்ஸில் உள்ள அந்த சரங்குக் கிடங்கில் தீ மூண்டதும் அதனைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அவரவர் இருக்கும் இடத்திலேயே தஞ்சம் புகுமாறும் சன்னல்களை மூடிவிட்டு, புகையைச் சுவாசிப்பதைத் தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

