போர்டோ: பிரான்சிலும் ஸ்பெயினிலும் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கடுமையாகப் போராடினர்.
அந்த இரு நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறும் அளவுக்குக் காட்டுத் தீ மோசமாகிவிட்டது.
கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட நிலவரத்தால் மேற்கு ஐரோப்பா மற்றொரு வெப்ப அலைக்குத் தயாராகிவரும் நிலையில் அதன் ஒரு பகுதியில் தீ வேகமாகப் பரவிவருகிறது.
பிரான்சின் போர்டோ பகுதியில் மூண்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி, ஒருவழியாகக் கட்டுப்படுத்தினர்.
அதேவேளை, ஸ்பெயினின் மத்திய டோலிடோ மாகாணத்தில் உள்ள 11 நகரங்களில் ஒன்பதிலிருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் அனுமதித்தனர்.
இருப்பினும், மாட்ரிட்டிலும் அருகிலுள்ள மாகாணங்களிலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது.
பொதுமக்கள் தங்கள் உடலில் இருந்த ஆடைகளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு தப்பி ஓடியதைக் கண்டதாக, ஸ்பெயினிலிருந்து தீ காரணமாக வெளியேற்றப்பட்ட ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் கூறினார்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 தீயணைப்புப் படையினர் காயமடைந்துள்ளதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்பெயினில் தலைநகர் மாட்ரிட், குவாடலஹாரா ஆகிய வட்டாரங்களில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், இதுவரை 320 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலங்கள் கருகின.
அந்நாட்டின் உள்துறை அமைச்சு 60,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளது.

