பொட்டலத்தில் சமைக்கப்படாத மீன்; இந்தோனீசியாவில் இலவச உணவு சமையல் கூடங்கள் மூடல்

பொட்டலத்தில் சமைக்கப்படாத மீன்; இந்தோனீசியாவில் இலவச உணவு சமையல் கூடங்கள் மூடல்

2 mins read
f5cced5f-8318-4df4-b5bc-f7d26ca0bb37
சமைக்கப்படாத, மசாலா தடவப்பட்ட கெளுத்தி மீன்கள் (catfish) அடங்கிய உணவுப் பொட்டலங்களைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அத்திட்டம் மீண்டும் பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. - படம்: இபிஏ

ஜகார்த்தா: கட்டாய சுகாதாரச் சான்றிதழைப் பெறத் தவறியதற்காக இந்தோனீசியா முழுவதும் உள்ள 2,200க்கும் மேற்பட்ட சமையல் கூடங்களின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக அந்நாட்டின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இந்தோனீசியாவில் ஏழ்மையில் வாடும் சமூகங்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அனைத்துச் சிறுவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கண்காணிக்கும் நிறுவனம் அது.

குறிப்பாக, ரமலான் நோன்பு மாதத்தில் உணவின் தரம், பாதுகாப்பு குறித்து அதிகரித்து வரும் புகார்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமைக்கப்படாத, மசாலா தடவப்பட்ட கெளுத்தி மீன்கள் (catfish) அடங்கிய உணவுப் பொட்டலங்களைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின.

அதனையடுத்து, அத்திட்டம் மீண்டும் பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கிழக்கு ஜாவாவில் உள்ள பமெகாசன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 1,022 உணவுப் பொட்டலங்கள் மார்ச் 9ஆம் தேதி தயார் செய்யப்பட்டன.

அவற்றில் சமைக்கப்படாத மீனுடன், வேகவைக்கப்படாத தேம்பே, டோஃபு ஆகியவையும் இருந்ததாகக் கூறப்பட்டது. அந்தப் பொட்டலங்கள், மாணவர்களின் உடல்நலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்ற அச்சத்தில் அப்பள்ளித் தலைமை ஆசிரியர் அவற்றை நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தொடங்கிவைத்த முதன்மைத் திட்டங்களில் ஒன்றான இந்த இலவச உணவுத் திட்டம் குறித்து விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

அதனையடுத்து, அத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் சமையல் கூடங்களின் செயல்பாட்டுத் தரங்களைத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆய்வு செய்யத் தொடங்கியது.

குறிப்பாக, சமைக்கப்படாத மீன் மாணவர்களின் உணவுப் பொட்டலத்தில் இருந்த சம்பவம், அதற்கு முன்னதாகப் பிற இடங்களில் பதிவான பெருமளவிலான நச்சுணவு பாதிப்புகள் ஆகியவை அந்த ஆய்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

கட்டாய சுகாதார, துப்புரவுச் சான்றிதழ்களைப் பெறத் தவறிய சமையல் கூடங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தேவையான சான்றிதழ்களைப் பதிவு செய்யத் தவறியதற்காக மேற்கு நுசா தெங்காரா, கிழக்கு நுசா தெங்காரா, மேற்கு கலிமந்தான், தெற்கு சுலாவெசி, மாலுகு, பப்புவா ஆகிய வட்டாரங்களில் உள்ள 717 சமையல் கூடங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக மார்ச் 11ஆம் தேதி தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்