16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: வியட்னாம் திட்டம்

16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: வியட்னாம் திட்டம்

2 mins read
cc7cd651-5c6d-484c-8532-bf08e1cfcc21
வியட்னாமின் திட்டத்தின்படி, 16 வயதிற்குட்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் அவர்களின் பெற்றோர் அல்லது சட்டபூர்வக் காப்பாளர்களின் தகவல்களைக் கொண்டே பதிவுசெய்யப்பட வேண்டும். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹனோய்: சமூக ஊடகங்களில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் புதிய பதிவுகளைப் பதிவிடவும், கருத்துகளைத் தெரிவிக்கவும், விருப்பக் குறியீடுகளை இடவும் தடை விதிக்க வியட்னாம் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான புதிய வரைவு ஒன்றையும் அந்நாட்டு அரசாங்கம் தற்போது தயாரித்துள்ளது.

அண்மை மாதங்களாக பல உலக நாடுகள், சிறுவர் சிறுமியர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டி நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதில் தற்போது வியட்னாமும் இணைந்துள்ளது.

வியட்னாமின் திட்டத்தின்படி, 16 வயதிற்குட்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் அவர்களின் பெற்றோர் அல்லது சட்டபூர்வக் காப்பாளர்களின் தகவல்களைக் கொண்டே பதிவுசெய்யப்பட வேண்டும்.

மேலும், பிள்ளைகள் இணையத்தில் பார்க்கும் பதிவுகளையும் அவர்கள் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தையும் கண்காணிக்கும் முழுப் பொறுப்பும் பெற்றோரையே சாரும்.

சிறுவர்களைத் துல்லியமாகக் கண்டறியவும் அவர்களுக்குப் பொருத்தமான உள்ளடக்கங்களை மட்டுமே வழங்கவும் தொழில்நுட்ப முறைகளைச் சமூக ஊடக நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும்.

அத்துடன், சிறுவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை ஊடக நிறுவனங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

“சமூக ஊடகங்களிலிருந்து சிறுவர்களை நீக்குவது அரசாங்கத்தின் நோக்கமன்று. மாறாக, ஆபத்துகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, அவர்களின் வயதிற்கு ஏற்ற நல்ல சூழலை உருவாக்குவதே முதன்மை இலக்காகும்,” என்று கலாசார துணை அமைச்சர் ஃபான் தாம் வியாழக்கிழமை (ஜூலை 23) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், இணைய விளையாட்டுகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.

சிறுவர்கள் இணைய விளையாட்டுகளை நாளொன்றுக்கு அதிகபட்சமாக 60 நிமிடங்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவர்.

விளையாட்டு நிறுவனங்கள் பயனீட்டாளர்களின் வயதை உறுதிசெய்து, பெற்றோரின் ஒப்புதலுடன் கணக்குகளைப் பதிவுசெய்ய வேண்டும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்