சான்சிபார்: கிழக்கு ஆப்பிரிக்கா, பொருளியல் வாய்ப்புகள் நிறைந்த வட்டாரம் என்றும் சிங்கப்பூர் அதைப் புரிந்துகொள்ள கூடுதல் முயற்சிகளை எடுக்கவேண்டும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூர் அதன் தொடர்புகளை விரிவுபடுத்துகிறது என்ற அதிபர், தான்சானியாவும் கிழக்கு ஆப்பிரிக்காவும் மதிப்புமிக்க பங்காளி நாடுகளாகத் திகழ முடியும் என்றார்.
“இளையரிடம் தொடங்கவேண்டும். நமது இளையர்களில் பலர் ஆப்பிரிக்கா பற்றி அறிந்துகொள்ள முன்வரவேண்டும்,” என்ற திரு தர்மன், தொலைதூரத்தில் உள்ள ஆப்பிரிக்கக் கண்டதைச் சிங்கப்பூரர்கள் சரிவர புரிந்துகொள்ளாமல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆனால், ஆப்பிரிக்காவை புரிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அது, பலதரப்பட்ட வட்டாரங்களும் வெவ்வேறு நாடுகளும் நிறைந்த கண்டம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் அதிபர் தர்மன்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட திரு தர்மன், பயணத்தின் முடிவில் சிங்கப்பூர் ஊடகத்திடம் பேசினார்.
தமது பயணத்தின்போது எட்டுக் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்து சிங்கப்பூர் கலந்துரையாடவிருப்பதாக அவர் அறிவித்தார்.
சிறிய நாடான சிங்கப்பூர் ஆப்பிரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் தன்னைப் புகுத்திக்கொள்ள முடியாது என்ற அதிபர் தர்மன், ஒருசில வட்டாரங்களுடன் அணுக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். அவற்றுள் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் தான்சானியாவுக்கும் முதலிடம் அளிக்கப்படுகிறது என்றார் அவர்.
ஆசியானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 35 ஆண்டுகளுக்குமுன் எந்த அளவில் இருந்ததோ அதே அளவில்தான் கிழக்கு ஆப்பிரிக்க சமூகக் குழுவில் உள்ள எட்டு நாடுகளின் பொருளியல் அளவும் இருக்கிறது என்ற திரு தர்மன், உலகில் மிகவும் விரைவாக வளர்ச்சியடையும் வட்டாரமாக அவை உள்ளன என்றார்.
தொடர்புடைய செய்திகள்
முன்பிருந்ததைவிட இன்று, அந்த வட்டாரம், இன்னும் சிறந்த வகையில் நிர்வகிக்கப்படுகிறது என்றும் அவற்றின் பொருளியல்கள் விரிவடைகின்றன என்றும் கூறிய அவர், அது இன்னும் நிலையாக இருக்க அந்த அம்சங்கள் கைகொடுக்கும் என்றார்.
தான்சானியாவையும் சன்சிபாரையும் உதாரணங்களாகச் சுட்டிய அதிபர், அவற்றின் உற்பத்தி மேம்படுவதுடன் துறைமுகங்களும் விரிவடைவதைச் சுட்டினார். சிங்கப்பூரின் அனுபவமும் நிபுணத்துவமும் அவற்றின் எதிர்காலத் திட்டங்களுக்குத் துணையாக உள்ளன என்றார் அவர்.

