பிஎன் கூட்டணியில் சலசலப்பு; அம்னோ கூட்டத்தில் மசீச, மஇகா தலைவர்கள்

2 mins read
e91dd095-57e0-4ee1-be51-b89605759288
ஜனவரி 16ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடந்த அம்னோ பொதுக் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள். - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: மலேசிய சீனர் சங்கம் (மசீச), மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) ஆகியவற்றின் தலைவர்கள் ஐக்கிய தேசிய மலாய்க்காரர்கள் அமைப்பு (அம்னோ) நடத்திய பொதுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) பங்கேற்றனர்.

அவர்களின் அச்செயல் ‘பாரி­சான் நேஷனல்’ (பிஎன்) எனும் தேசிய முன்னணி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக வர்த்தக மையத்தில் நடந்த அக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மசீச தலைவர் வீ கா சியோங்கும் மஇகா துணைத் தலைவர் எம். சரவணனும் கலந்து கொண்டனர்.

அவர்களின் வருகையைத் தமது தொடக்க உரையில் குறிப்பிட்டுப் பேசிய அம்னோ பொதுச்செயலாளர் டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி, ஐக்கிய சபா மக்கள் கட்சியின் (பிபிஆர்எஸ்) தலைவர் ஆர்தர் ஜோசப் குருப்பையும் வரவேற்றார்.

“இன்றைய நிகழ்ச்சியில் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து மசீச, மஇகா, பிபிஆர்எஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நமது நண்பர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுக்குக் கைத்தட்டி உற்சாகமான வரவேற்பு அளியுங்கள்,” எனத் திரு அசிரஃப் தமது உரையில் கூறினார்.

மலேசியாவை ஆளும் திரு அன்வார் இப்ராகிமின் அரசாங்கத்தில் தேசிய முன்னணி கூட்டணி அங்கம் வகித்தபோதிலும், தற்போதைய நிர்வாகத்தால் மசீச, மஇகா ஆகிய இரு கட்சிகளின் பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், அவ்விரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அம்னோ நடத்திய கூட்டத்திற்கு வருகையளித்திருப்பது மலேசிய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தேசிய முன்னணி கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் எனக் கடந்த ஆண்டு நடந்த மஇகா கட்சியின் வருடாந்தரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்