நிறைவேறாத தண்டனை: அமெரிக்கச் சிறைத்துறை ஆணையர் பதவி விலகல்

நிறைவேறாத தண்டனை: அமெரிக்கச் சிறைத்துறை ஆணையர் பதவி விலகல்

படம்: ராய்ட்டர்ஸ்

04 Oct 2026 - 12:58 pm

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவின் தென்பகுதியின் டெனஸி மாநிலத்தில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டப் பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில் குழப்பம் ஏற்பட்டது.

கடந்த வியாழக்கிழமை கிறிடா பைக் என்ற பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டும் அவர் உயிர் பிரியாமல் தொடர்ந்து மூச்சு விட்டதால், தண்டனை நிறுத்தப்பட்டு அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தண்டனை நிறைவேற்றப்படவேண்டிய சிறையின் ஆணையர், நடந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அவரது பதவியில் இருந்து விலகிவிட்டதாக அம்மாநில ஆளுநர் பில் லீ சனிக்கிழமை (அக்டோபர் 3) தெரிவித்தார்.

தண்டனை நடைமுறைகளை மறுஆய்வு செய்யும்வரை இவ்வாண்டு அந்த சிறைச்சாலையில் நிறைவேற்றப்படவேண்டிய அனைத்து மரண தண்டனைகளையும் நிறுத்திவைப்பதாக ஆளுநர் உத்தரவிட்டார்.

சிறைத்துறை ஆணையர் ஃபிராங்க் ஸ்ட்ராடா இம்மாதக் கடைசியில் பதவி விலகுவார் என்று ஆளுநரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் அந்த மாது சுயநினைவிழந்து, மருத்துவ இயந்திரத்தின் வழியாக மூச்சு விடுவதாகவும் மிகவும் மோசமான நிலையில் அவர் உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் கூறினர்.

1995ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது.

அந்தச் சிறைச்சாலையில் இவ்வாண்டில் மரண தண்டனை இதோடு இரண்டாவது முறையாக நிறைவேற்றப்படவில்லை. மே மாதம் நடந்த சம்பவத்தில் குற்றவாளியின் நரம்பினை முறையாக மருத்துவப் பணியாளர்கள் அடையாளப்படுத்தி விஷ ஊசியைச் செலுத்தத் தவறினர் என்று தெரிவிக்கப்பட்டது.

இக்கட்டான காலத்தில் மாநில மக்களின் நலன்கருதி செயல்பட்டமைக்கு சிறைத்துறை ஆணையருக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அமெரிக்காவில் 1976ஆம் ஆண்டுமுதல் இதுவரை 18 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேறியுள்ளது என அமெரிக்க மரண தண்டனைத் தகவல் மையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காசிறைசிறைச்சாலைசிறைத்துறைசிறைத்தண்டனைமரண தண்டனைஉயிர்வாயுமருத்துவமனைவழக்கறிஞர்ஆளுநர்அறிக்கை