உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் என்ற பகுதியில் பெட்வா ஆற்றுக்கு மேல் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று வெள்ளிக்கிழமை (மே 29) அதிகாலை பெய்தமழையில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விபத்தில் ஆறு ஊழியர்கள் மரணமடைந்ததோடு பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மோரா கண்டவுர், கௌராரா பகுதிகளை இணைப்பதற்கு பெட்வா ஆற்றுக்கு மேல் கட்டப்பட்டு வந்த அந்தப் பாலம் பெய்த மழையாலும் காற்றாலும் பாதிக்கப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் திடீர் என இடிந்து விழுந்தது.
பல ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்
சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணிகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டது. காவல்துறை, வட்டார நிர்வாகக் குழுவினர், அவசரகால சேவைப் பணியாளர்கள், மீட்புப் படையினர் என பலரும் சம்பவ இடத்தை அடைந்தனர். இடிபாடுகளில் மேலும் பல ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காகக் காயமடைந்தோர் அழைத்துச் செல்லப்பட்டனர். மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்து குறித்து கவலை தெரிவித்ததோடு மரணமடைந்தோருக்கு ஆறுதல் கூறினார்.
மாநில அரசு மரணமடைந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் 500,000 ரூபாய் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் காயம் அடைந்தோருக்கு தலா 50,000 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தோருக்கு முறையாக மருத்துவ உதவிகள் வழங்கப்படவேண்டும் எனவும் மீட்புப் பணிகளை கண்காணிக்கவும் முதல்வர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

