மலேசியாவில் 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத்தரம்

மலேசியாவில் 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத்தரம்

2 mins read
875628d0-338c-45c5-9a62-af9e21269106
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 150க்கும் மேல் பதிவானது. - படம்: இபிஏ

கோலாலம்பூர்: மலேசியாவில் நாடு முழுதும் 38 பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) காலையில் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

நாட்டின் மிக மோசமான புகைமூட்டச் சூழலைச் சரவாக் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

சரவாக்கில் உள்ள செரியான் கண்காணிப்பு நிலையத்தில் காலை 8.45 மணி நிலவரப்படி காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 188ஆகப் பதிவாகியுள்ளது. இதுவே நாடு முழுதிலும் பதிவான மிக அதிக அளவு.

மலேசியாவின் இயற்கை வள, சுற்றுப்புற நிலைத்தன்மை அமைச்சின் கீழ் உள்ள சுற்றுப்புறத் துறை அந்தத் தகவலை வெளியிட்டது.

செரியானுக்கு அடுத்து, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஜோஹான் செத்தியாவில் குறியீடு 183ஆக இருந்தது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலையில் மலேசியாவில் அதிகப் பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பதிவான மாநிலமாக ஜோகூர் இருந்தது. இவற்றில் பாசிர் கூடாங் (172), லார்க்கின் (169), தாங்க்காக் (166) ஆகியவை அடங்கும் என்று ‘மலாய் மெயில்’ ஊடகம் தெரிவித்தது.

சிலாங்கூரில் உள்ள கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியும் புகைமூட்டத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. கோலாலம்பூரில் உள்ள செராஸ் (170), ஷா ஆலம் (167), புத்ராஜெயா (165) உட்பட பல பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 150க்கு மேல் பதிவானது.

மற்ற இடங்களிலும் குறியீடு ஆரோக்கியமற்ற வரம்பில் இருந்தது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நிலாயில் 167ஆகவும் சரவாக்கில் உள்ள சமரஹானில் 163ஆகவும் குறியீடு பதிவானது.

போர்னியோ தீவில் இந்தோனீசியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் சரவாக், அண்டை நாட்டின் காட்டுத் தீயினால் ஏற்படும் எல்லை தாண்டிய புகைமூட்டத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மலேசிய மாநிலங்களில் ஒன்றாக இருந்துவருகிறது.

செவ்வாய்க்கிழமையன்று ஆரோக்கியமற்ற காற்றின் தரம் கொண்ட பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைந்த குறியீடுகள் மலேசியாவின் வட மாநிலங்களில் பதிவாயின.

சுற்றுப்புறத் துறையின் தகவல்படி, பினாங்கிலுள்ள பாலிக் புலாவில் குறியீடு 131ஆகவும் மிண்டனில் 111ஆகவும் இருந்த வேளையில், கெடாவிலுள்ள சுங்கை பட்டாணி நாடு முழுதும் குறைந்தபட்ச ஆரோக்கியமற்ற குறியீட்டைப் (103) பதிவு செய்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபுகைமூட்டம்காற்றுத்தரம்ஆரோக்கியம்