லாஸ் ஏஞ்சலிஸ்: ஓடுபாதையிலிருந்து விமானம் மேலேறத் தொடங்கியதும் அதன் பின்சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, திங்கட்கிழமையன்று (ஜூன் 8) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து டென்வர் நோக்கிப் புறப்பட்டது.
இந்நிலையில், அவ்விமானம் பறக்கத் தொடங்கியதும், தரையிறங்க உதவும் அதன் பின்சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்தது. இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
ஆயினும், அந்த போயிங் 757-200 விமானம் டென்வரில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்றும் அதில் சென்றோரில் எவரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவ்விமானத்தில் ஏழு ஊழியர்களும் 174 பயணிகளும் இருந்ததாகச் சொல்லப்பட்டது.
கழன்று விழுந்த சக்கரம் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலேயே கண்டெடுக்கப்பட்டதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.
சக்கரம் கழன்று விழுந்த சம்பவம் குறித்து அந்நிறுவனமும் அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையமும் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஜப்பானுக்குக் கிளம்பிய ஒரு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்தும் சக்கரம் கழன்று விழுந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவ்விமானம் லாஸ் ஏஞ்சலிசில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

