துபாய்: மத்திய கிழக்குப் போரினால் ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியாக ஏற்றுமதி முடங்கியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்துச் செல்லும் புதிய எண்ணெய்க் குழாய் அமைக்கும் பணியை ஐக்கிய அரபு சிற்றரசுகள் ‘துரிதப்படுத்த’ உள்ளதாக அதிகாரபூர்வ ஊடகங்கள் வெள்ளிக்கிழமையன்று (மே 15) தெரிவித்தன.
இந்த மேற்கு-கிழக்கு குழாய் பாதை, ஃபுஜைரா துறைமுகம் வழியாக அரசு எண்ணெய் நிறுவனமான ADNOCன் திறனை இரட்டிப்பாக்கும் என்றும் இது 2027ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் முகமது பின் சயீத் அல் நஹ்யான், “இந்தத் திட்டத்தை விரைவாக முடிக்குமாறு ADNOCக்கு உத்தரவிட்டார்,” என்று அந்த அறிக்கை கூறியது.
ஹப்ஷான் எண்ணெய் வயல்களிலிருந்து ஃபுஜைரா வரை ஏற்கனவே உள்ள 360 கி.மீ நீளமுள்ள குழாய் பாதையின் கொள்ளளவு ஒரு நாளைக்கு 1.8 மில்லியன் பீப்பாய்கள் என்று ஃபுஜைரா துறைமுக இணையத்தளம் கூறுகிறது.
மே மாதத் தொடக்கத்தில் ஓபெக் எண்ணெய் கூட்டமைப்பிலிருந்து விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஐக்கிய அரபு சிற்றரசுகள், 2027ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் உற்பத்தித் திறனை ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
மத்திய கிழக்குப் போரின் போது ஃபுஜைராவில் உள்ள எண்ணெய் வசதிகள் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மே 4ஆம் தேதி அன்று நடந்த அண்மைய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்ததாக ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கிறது.

