அமெரிக்காவில் 75 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்தனர்

அமெரிக்காவில் 75 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்தனர்

2 mins read
33edc668-3881-4463-9be0-60ea3e47a453
வடகரோலைனா மாநிலத்தில் முன்கூட்டியே வாக்களிக்க வந்த மக்களுக்கு தேர்தல் அதிகாரிகள் உதவினர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏறத்தாழ 75 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துவிட்டனர்.

அஞ்சல் வழியாகவும் நேரடியாகவும் அவர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

குறிப்பாக, ஹெலின் சூறாவளியால் சிதையுண்ட வடகரோலைனா மாநிலத்தில் ஏறக்குறைய 4.5 மில்லியன் பேர் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்தனர்.

அமெரிக்கத் தேர்தல் சட்டவிதிகளின்படி, குறிப்பிட்ட சில காரணங்களுக்காக முன்கூட்டியே வாக்குகளைச் செலுத்த முடியும்.

அஞ்சல் வழியாகவும் சிறப்பு வாக்கு நிலையங்களிலும் அவர்கள் வாக்களிக்கலாம்.

இயற்கைப் பேரிடர், உடல்நிலை, தவிர்க்க இயலாத பயணம் ஆகிய காரணங்களுடன் வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து வாக்களிப்பதைத் தவிர்க்கவும் முன்கூட்டி வாக்களிக்கும் முறை அமெரிக்காவில் பின்பற்றப்படுகிறது.

அதற்கு இணங்க, தற்போதைய அதிபர் தேர்தல் நாளான நவம்பர் 5ஆம் தேதிக்கு முன்னரே ஏராளமானோர் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

அண்மைய அமெரிக்க அரசியல் வரலாற்றில் இந்த வாரம் பதற்றம் மிகுந்த வாரமாக உள்ளதென அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், வாக்களிப்போரிடம் கவலையும் பதற்றமும் காணப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

2020 அதிபர் தேர்தலுக்குப் பின்னர் 2021 ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நிகழ்ந்த வன்முறையும் அதற்கு ஒரு காரணம்.

தேர்தல் அதிகாரிகளும் சில சோதனைகளைச் சந்தித்தனர். குறிப்பாக, பென்சில்வேனியா மாநிலத்தின் முக்கிய மாவட்டம் ஒன்றில் உள்ள ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு அஞ்சலில் வாக்குச்சீட்டுகளை அவர்கள் அனுப்பத் தவறினர்.

அதேபோல, மற்றொரு மாவட்டப் பகுதியில் நேரடியாக வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிப்பு நேரம் நிறைவடைவதற்கு முன்னரே திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஜார்ஜியா மாநில வாக்குப்பதிவில் ரஷ்யத் தலையீடு கண்டறியப்பட்டது. கொலராடோ மாநிலத்தில் வாக்குப் பதிவு தொடர்பான இயந்திரங்களின் மறைச்சொற்களின் ஒரு பகுதி சேதமடைந்தது. அதனை அதிகாரிகள் கண்டறிந்து சீர்படுத்தினர்.

சில குழப்பங்கள் காரணமாக பென்சில்வேனியா மாவட்டங்களில் வாக்களிப்புக்குக் கூடுதல் நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்