அமெரிக்கா: ஜோ பைடனுக்குக் கடுமையான ஆண் சுரப்பி புற்றுநோய்

2 mins read
35184f47-75f7-4894-8961-65998f0b2ccc
சில நாள்களுக்கு முன் பரிசோதனைக்குச் சென்ற முன்னாள் அதிபர் ஜோ பைடனிடம் ஆண் சுரப்பி புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ‘புரோஸ்டேட்’ எனும் ஆண் சுரப்பி புற்றுநோய் இருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. புற்றுநோய் 82 வயது திரு பைடனின் எலும்புகளுக்குப் பரவியுள்ளது.

இவ்வாண்டு ஜனவரியில் அதிபர் பதவிக்காலம் முடிந்து திரு பைடன் கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) மருத்துவரைச் சந்தித்தபோது புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அந்தப் புற்றுநோய் கடுமையான ஒன்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திரு பைடனுக்கு உள்ள புற்றுநோய் துரிதமாகப் பரவக்கூடியது என்று பிரிட்டி‌ஷ் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு குறிப்பிட்டது.

திரு பைடனும் அவரது குடும்பமும் சிகிச்சைக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயவிருக்கின்றனர். முன்னாள் அதிபர் பைடனின் அலுவலகம் அவரது புற்றுநோய் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படலாம் என்று சொன்னது.

திரு பைடனின் அறிவிப்பை அடுத்து தாமும் தமது துணைவி மெலனி டிரம்ப்பும் கவலையுற்றதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது ட்ருத் சோ‌ஷியல் பக்கத்தில் பதிவிட்டார்.

“திரு பைடன் துரிதமாகவும் வெற்றிகரமாகவும் குணமடைய வேண்டுகிறோம்,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

திரு பைடனின் கீழ் சேவையாற்றிய முன்னாள் துணையதிபர் கமலா ஹாரிஸ் தாமும் தமது கணவர் டுக் எம்ஹொஃபும் திரு பைடனின் குடும்பத்துக்காக வேண்டிக்கொள்வதாக எக்ஸ் தளத்தில் கூறினார்.

“ஜோ ஒரு போராளி. அவரது வாழ்க்கையையும் தலைமைத்துவத்தையும் உருவாக்கிய வலுவோடும் மீள்திறனோடும் இந்தச் சவாலை அவர் எதிர்கொள்வார் என்று எனக்குத் தெரியும்,” என்றார் திருவாட்டி ஹாரிஸ்.

2009ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை அதிபராகச் சேவையாற்றிய திரு பராக் ஓபாமாவும் தமது எக்ஸ் தளத்தில் திரு பைடன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகச் சொன்னார்.

2016ஆம் ஆண்டு தாம் அறிமுகம் செய்த ‘கேன்சர் மூன்‌ஷொட்’ (Cancer moonshot) என்ற புற்றுநோய் திட்டத்தைத் திரு பைடன் வழிநடத்துவார் என்று சொன்னதைத் திரு ஒபாமா நினைவுகூர்ந்தார்.

தோல் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக ஆண்களை அதிகம் பாதிப்பது ஆண் சுரப்பி புற்றுநோய் என்று கிளீவ்லண்ட் மருத்துவமனை சொன்னது.

அமெரிக்காவின் நோய்க் கட்டுபாட்டு, தடுப்பு நிலையங்கள் 100 ஆண்களில் 13 பேர் ஆண் சுரப்பியால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்