ஃபிலடெல்ஃபியா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இருக்கும் ஃபிலடெல்ஃபியா நகரில் சிறிய மீட்பு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியது.
ஒரு குழந்தை உட்பட அறுவர் அந்த விமானத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் உயிர் தப்பியதாகத் தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அவ்விமானத்தை இயக்கிய ஆகாய மருத்துவ உதவி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜெட் ரெஸ்கியூ ஏர் ஆம்புலன்ஸ் (Jet Rescue Air Ambulance) எனும் மெக்சிகோவைச் சேர்ந்த அந்நிறுவனம் நான்கு ஊழியர்கள், ஒரு நோயாளி, அந்நோயாளியைக் கவனித்துக்கொண்டவர் என அறுவர் இருந்த தங்கள் விமானம் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவித்தது.
“இப்போதைக்கு யாரேனும் உயிர் தப்பினாரா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை,” என்று ஜெட் ரெஸ்கியூ ஏர் ஆம்புலன்ஸ் அறிக்கை மூலம் கூறியது.
விழுந்து நொங்றுகிய விமானத்தில் இருந்த அனைவரும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்ததாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டது. அதிலிருந்த நோயாளி ஒரு சிறுமி என்றும் சிறுமியைக் கவனித்துக்கொண்டிருந்தவர் அவரின் தாய் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி மெக்சிகோவின் டிஹுவானா நகருக்குச் சென்றுகொண்டிருந்தார்.
ஃபிலடெல்ஃபியா நகரில் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் பகுதியில் விமானம் விழுந்தது. நிலத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) மாநில, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாப்பிரோ, “இந்த வட்டாரத்தில் உயிரிழப்பு இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்நேரத்தில் துயரத்துக்கு ஆளானோரை எங்களின் எண்ணங்களில் கொண்டு அவர்களுக்குத் தீவிரமாகப் பிரார்த்திக்கிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், “பென்சில்வேனியா மாநிலத்தின் ஃபிலடெல்ஃபியா நகரில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கியது வருத்தம் தருகிறது. மேலும் சில அப்பாவி உயிர்கள் பலியாகிவிட்டன,” என்று சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
முன்னதாக இந்த வாரம் வாஷிங்டனில் அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்றும் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாயின. 67 பேரைப் பலிவாங்கிய அவ்விபத்து, கடந்த 16 ஆண்டுகளில் அமெரிக்காவில் நேர்ந்துள்ள ஆக மோசமான விமான விபத்தாகும்.
அதற்கு சில நாள்கள் கழித்து ஃபிலடெல்ஃபியாவில் விமான விபத்து நேர்ந்திருக்கிறது.
குறைந்தது இருவரைக் கொண்ட சிறிய விமானம் வடகிழக்கு ஃபிலடெல்ஃபியாவில் இருக்கும் ரூசவெல்ட் மால் (Roosevelt Mall) கடைத்தொகுதிக்கு அருகே விழுந்ததாகவும் நிலத்தில் பலர் காயமுற்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. சம்பவம் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) மாலை 6.30 மணியளவில் நேர்ந்தது.