தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா, பிரான்ஸ் ஏற்பாட்டில் இஸ்ரேல், ஹிஸ்புல்லாவுக்கு இடையே போர்நிறுத்தம்

2 mins read
d1438e29-a6f3-4eb7-8257-f6433f404224
ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு இடையே நடக்கும் போரில் இஸ்ரேல் ஹம்ரா என்ற பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்/ஜெருசலம்/பெய்ருட் : இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே புதன்கிழமை (நவம்பர் 27ஆம் தேதி) முதல் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போர்நிறுத்தத்தை அமெரிக்காவும் பிரான்சும் ஏற்பாடு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நவம்பர் 26ஆம் தேதி அறிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு காஸா போரின் தொடர்ச்சியாக ஏற்பட்ட இந்தப் போர் நிரந்தரப் போர்நிறுத்தமாக அமையும் வடிவில் இருக்கும் என்று அதிபர் பைடன் தெரிவித்தார்.

இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேலிய அமைச்சரவை 10-1 என்ற எண்ணிக்கையில் அங்கீகரித்ததைத் தொடர்ந்து திரு பைடன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தாம் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவிடமும் லெபனானியப் பிரதமர் நஜிப் மிக்காத்தியிடமும் பேசியதாகவும் அவர் விளக்கினார்.

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு போர் முடிவுக்கு வரும் என திரு பைடன் கூறினார்.

“இது நிரந்தர சண்டை நிறுத்தமாக இருக்கும்,” என்றும் எஞ்சிய ஹிஸ்புல்லா, மற்ற பயங்கரவாத அமைப்புகளும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்க அனுமதிக்கப்படாது என்று தெளிவுபடுத்தினார்.

இந்த உடன்பாட்டின்படி, இஸ்ரேல் படிப்படியாக அடுத்த 60 நாள்களில் தனது படைகளை திரும்பப் பெறுவதுடன் லெபனான் தனது எல்லையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும். இதில் ஹிஸ்புல்லா அமைப்பு தனது கட்டமைப்பை மீண்டும் கட்டி எழுப்பாமல் இருப்பதை லெபனான் உறுதி செய்யும் என்று திரு பைடன் தெரிவித்தார்.

“இரு தரப்பு பொதுமக்களும் தங்கள் பகுதிகளுக்கு பாதுகாப்பான முறையில் மீண்டும் திரும்பிச் செல்ல முடியும்,” என்று திரு பைடன் சொன்னார்.

இந்த உடன்பாட்டை பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் தமது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இது, “பல மாதங்களாக அமெரிக்காவுடன் அணுக்க ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய, லெபனானிய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவு,” என்று அதை திரு மெக்ரோன் வர்ணித்தார்.

இது குறித்துப் பேசிய லெபனானிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலியப் படையினர் வெளியேறிய பின் தமது நாடு குறைந்தது 5,000 படையினரை அங்கு நிறுத்தும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு போர்நிறுத்த உடன்பாட்டை தமது நாடு அமல் செய்யும் என்றும் போர்நிறுத்த மீறலுக்கு தமது நாடு கடுமையான பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்தார்.

இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டை எகிப்து, ஈரான் போன்ற நாடுகள் போர்நிறுத்த உடன்பாட்டை வரவேற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்