வடகொரிய அணுசக்திப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் நெருங்கிய தொடர்பையும் ஒத்துழைப்பையும் பேணுவதற்கு அமெரிக்காவும் தென்கொரியாவும் ஒப்புக்கொண்டதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூனும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தொலைபேசியில் உரையாடினர்.
அப்போது, கூட்டணி நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவும் சூழலில் நடைபெற்ற அந்த உரையாடல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சு மிகச் சுருக்கமான அறிக்கையை மட்டுமே வெளியிட்டது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அண்மையில் கூட்டு ராணுவப் பயிற்சிகளைக் குறைப்பதாக அறிவித்ததுடன், அணுவாயுதம் வைத்திருக்கும் வட கொரியாவைப் பாராட்டினார். அதே வேளையில், ஈரானை அணுவாயுதமற்ற நாடாக மாற்றும் தமது முயற்சிகளுக்குத் தென்கொரியா உதவவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
தென் கொரியாவின் அதிகாரபூர்வப் பெயரான ‘கொரியக் குடியரசு’ என்பதைக் குறிக்கும் ‘ஆர்ஓகே’ என்ற எழுத்துகளைப் பயன்படுத்தி, ‘அமெரிக்க-ஆர்ஓகே’ கூட்டணியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்துத் திரு ரூபியோவும் திரு சோவும் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
“கூட்டணிக்கு அவசியமான விவகாரங்களில் இரு நாடுகளும் நெருங்கிய ஒருங்கிணைப்பில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டினார்” என்று அறிக்கை கூறியது.
வடகொரிய அணுசக்திப் பிரச்சினையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் இருவரும் வலியுறுத்தினர். ஆயினும், வடகொரியாவை அணுவாயுதமற்ற நாடாக்குவது குறித்த நிலைப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிசெய்தார்களா என்பதைப் பற்றி தென் கொரிய வெளியுறவு அமைச்சு எதுவும் குறிப்பிடவில்லை.


