ஜித்தா: அமெரிக்கா -உக்ரேன் இடையே சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) நடக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 28ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தை கருத்து மோதலில் முடிந்தது.
அதைத் தொடர்ந்து திரு ஸெலென்ஸ்கி, கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும் வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பு, மற்ற நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமலும் கிளம்பியதாகக் கூறப்பட்டது.
அமெரிக்காவுடனான கனிமவள ஒப்பந்தம், அந்நாடு உக்ரேனுக்கு செய்த $65 பில்லியன் அமெரிக்க டாலர் (S$86 பில்லியன்) உதவியை ஈடுகட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திரு ஸெலென்ஸ்கி அதில் கையெழுத்திடாமலேயே சென்றுவிட்டார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
அச்சம்பவத்திற்குப் பிறகு இரு நாட்டு அதிகாரிகளும் முதன்முறையாகச் சவூதியில் சந்திக்கின்றனர். ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டிரம்ப் உக்ரேனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
அதன் காரணமாகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நிலைப்பாட்டில் உக்ரேன் உள்ளதா என்பதை அறிந்திடவும் உக்ரேனுடான அமெரிக்காவின் உறவை மீட்டெடுக்கவும் இப்பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.
“உக்ரேனுடைய நிலைப்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், போரை நிறுத்துவதற்கு அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து அறிய வேண்டும். ஏனென்றால் இரு தரப்பினரும் சமரசம் செய்துகொள்ளாவிட்டால், ஒரு போரை நிறுத்தவோ அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவோ முடியாது,” என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமை ஜித்தாவுக்குச் செல்லும் வழியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இதற்கிடையே, ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உக்ரேனிய, அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் சந்திப்புக்கு முன்னதாக திரு ஸெலென்ஸ்கி, மார்ச் 10ஆம் தேதி சவூதி அரேபியா பட்டத்து இளவரசரைச் சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் கலந்துகொள்ளமாட்டார் என ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

