ரியாத்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மார்ச் 10ஆம் தேதி சவூதி அரேபியா செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அங்குப் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானைச் சந்திக்க உள்ளதாகவும் அவர் வியாழக்கிழமை (மார்ச் 6) இரவு கூறினார்.
அடுத்த வாரம் அமெரிக்க அதிகாரிகளும் உக்ரேனிய அதிகாரிகளும் சவூதியில் சந்தித்துப் பேச உள்ள நிலையில் ஸெலென்ஸ்கி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
ஸெலென்ஸ்கி தமது டெலிகிராம் பக்கத்தில் “ அடுத்த வாரம் திங்கட்கிழமை நான் சவூதி அரேபியாவுக்குச் சென்று பட்டத்து இளவரசரைச் சந்திக்கிறேன். என்னுடன் வரும் உக்ரேனிய குழு அங்கேயே இருந்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், அமைதிக்காக உக்ரேன் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், உக்ரேனிய அதிகாரிகளுடன் தாம் அமைதிக்கான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
ரஷ்யாவுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
பேச்சுவார்த்தை ரியாத் அல்லது ஜெட்டாவில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி 28ஆம் தேதி அதிபர் டிரம்ப்புக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. அது இரு நாடுகளின் நட்பில் விரிசலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியது.
இருப்பினும் அதன்பின்னர் இரு நாடுகளும் கனிம ஒப்பந்தம் மூலம் வருவாய்ப் பகிர்வு குறித்துப் பேசத் தொடங்கினர்.
இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்றத்தில் மார்ச் 4ஆம் தேதி அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது திரு ஸெலென்ஸ்கி தமக்கு எழுதிய கடிதம் குறித்துப் பேசினார்.
கடிதத்தில் உக்ரேனியத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

