தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவின் பாதுகாப்பு, தொழில்நுட்ப உதவி தேவை: தைவான்

1 mins read
bf091922-9507-4c79-b604-11ca6bdb7ca0
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தைவானின் பொருள்களில் 60 விழுக்காடு தகவல், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவை. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்கா தனது நாட்டின் பொருள்கள்மீது வரிகளை விதித்தாலும் அந்நாட்டுடன் ஆழமான ராணுவ, பொருளியல் ஒத்துழைப்பு தேவை என்று தைவானிய அதிகாரிகள் மே 11ஆம் தேதி தெரிவித்தனர்.

சீனாவின் மிரட்டலை அடிக்கடி எதிர்கொள்ளும் தைவானின் பாதுகாப்புக்கு நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா, ஏப்ரலில் தைவான் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்தது. பின்னர் 90 நாள்களுக்கு வரி விதிப்பை அமெரிக்கா நிறுத்திவைத்தது.

“அமெரிக்காவின் வரி விதிப்பால் ஒட்டுமொத்த உலகமே கவலைப்படுகிறது. எங்களுடைய அதிபர் லாய் சிங்-டேயும் ஏற்கெனவே தைவானின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை பத்து முறைக்கு மேல் சந்தித்து அவர்களுடைய கவலைகளை அறிந்துள்ளார்,” என்று தைவானிய நிர்வாகக் கிளையின் தலைமைச் செயலாளர் குங் மிங்-ஹிசின் தெரிவித்தார்.

அண்மையில் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சென்றிருந்த குங், பாதுகாப்பு மற்றும் தொழிநுட்பத் துறையில் இரு தரப்பும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

“உதாரணமாக, ட்ரோன்கள் துறையில் நாம் ஆய்வு மற்றும் மேம்பாட்டை ஒன்றாக மேற்கொள்ளலாம்,” என்று கூறிய அவர், “அமெரிக்கா மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் இந்த வகையான மேம்பட்ட தொழில்நுட்பங்களை பெருமளவில் உற்பத்தி செய்வதில் தைவான் மிகவும் வலுவாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கான தைவானிய ஏற்றுமதியில் சுமார் 60 விழுக்காடு, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவை. அவற்றில் பகுதி மின்கடத்திகள் முன்னணி வகிக்கின்றன. அவை தொலைக்காட்சிகள், கார்கள், ஆயுதங்கள் முதல் சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்