வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் துப்பாக்கிக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பலர் காயமடைந்ததாக செப்டம்பர் 21ஆம் தேதி அது தகவல் வெளியிட்டது.
பர்மிங்ஹாமில் இரவு 11 மணிக்கு, ஒன்றுக்கு மேற்பட்டோர், மக்களில் பலரை நோக்கிப் பலமுறை சுட்டதாக நம்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆடவர் இருவருடன் ஒரு பெண்ணும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் விழுந்து கிடக்கக் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டதாகக் கூறப்பட்டது.
மற்றொருவர் உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் வீதிகளில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்கு ஆளாயினர் என்று காவல்துறை கூறியது.
தாக்குதல்காரர்கள் வாகனத்தில் சென்றனரா அல்லது நடந்து சென்றனரா என்ற தகவல் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவத்தின் தொடர்பில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
விசாரணை தொடரும் வேளையில் தகவலறிந்தால் முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


