தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்கா

2 mins read
69ed883b-4c7f-46bf-9619-8283290b64b9
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் ஈரானை எச்சரித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை ஜெருசலம் சென்றார்.

“திரு டோனல்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் அதன் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் துணையாக நிற்கும்,” என்று திரு ரூபியோ தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தருவதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

ஜோ பைடன் அதிபராக இருந்தபோது இஸ்ரேலுக்கு அமெரிக்கா வெளிப்படையாக முழு ஆதரவு தரவில்லை. ஆனால் இப்போது நெட்டன்யாகுவின் திட்டங்களுக்கு அமெரிக்கா பக்கபலமாக நிற்பது தெளிவாக உள்ளது.

காஸா போராக இருந்தாலும் சரி ஈரானுக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தாலும் சரி அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஈரான் தரும் அச்சுறுத்தல் தான் மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலையற்ற சூழலை ஏற்படுத்துவதாக ரூபியோ குற்றஞ்சாட்டினார்.

“ஒவ்வொரு பயங்கரவாத அமைப்புக்கு பின்னணியில் ஈரான் உள்ளது. ஒவ்வொரு வன்முறை செயலுக்கு பின்னால் ஈரான் இருக்கிறது. நிலையற்ற சூழல், பல மில்லியன் மக்களின் அமைதியை கெடுப்பது ஈரான்,” என்று ரூபியோ நெட்டன்யாகு முன்னிலையில் குறிப்பிட்டார்.

ஹமாஸ் படையால் ராணுவமாகவோ, அரசாங்கமாகவோ தொடர்ந்து செயல்பட முடியாது. அதை விரைவில் துடைத்து ஒழிக்க வேண்டும் என்று ரூபியோ சூளுரைத்தார்.

ஹமாஸ் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் ஹமாஸ் மீது போர்தொடுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு ஹமாசை அழிக்காமல் ஓயமாட்டேன் என்று தெரிவித்தார். அதை தற்போதும் கூறிவருகிறார்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் ஆயுதங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

போர் குற்றங்கள் ஏற்படலாம் என்பதால் பைடன் அதிபராக இருந்தபோது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு கொடுக்காமல் தடுத்துவைத்தார்.

தமது இஸ்ரேலியப் பயணத்தை முடித்துக்கொண்ட திரு ரூபியோ திங்கட்கிழமை (பிப்ரவரி 17) சவூதி அரேபியாவுக்கு புறப்பட்டார். அதன் பின்னர் அவர் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

திரு ரூபியோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக மத்திய கிழக்கு வட்டாரத்தில் அரச தந்திர பயணத்தை மேற்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்