வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கத்துக்கு நிதி ஒதுக்குவதில் குடியரசு - ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாட்டால் அந்நாட்டு அரசாங்கம் முடங்கியது.
43 நாள்கள் நீடித்த வரலாறு காணாத முடக்கத்தால் அந்நாட்டில் விமானச் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு வாரக்கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை. இதையொட்டி ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு விமானச் சேவைகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கவலைகள் காரணமாக நாற்பது முக்கிய விமான நிலையங்களில் நவம்பர் 12ஆம் தேதிக்கான விமானச் சேவைகளை ஆறு விழுக்காடாகக் குறைக்குமாறு விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியது.
அரசாங்க முடக்கநிலை முடிவுக்கு வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக இந்த அறிவிப்பை அது வெளியிட்டது.
விமானச் சேவைகள், நவம்பர் 13ஆம் தேதி எட்டு விழுக்காடாகவும் நவம்பர் 14ஆம் தேதி 10 விழுக்காடாகவும் குறைக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசாங்கம் முடக்கநிலையிலிருந்து படிப்படியாக இயல்பு செயல்பாடுகளுக்குத் திரும்பி வருவதால், விமானச் சேவைகளில் ஆறு விழுக்காடு குறைக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டது.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஃபிளைட்வேர் நிறுவனத்தின் தரவுகளின்படி, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 900 விமானச் சேவைகளை நவம்பர் 12ஆம் தேதி ரத்து செய்ததாகவும் கடந்த ஆறு நாள்களில் இது ஆகக் குறைவு என்றும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், நவம்பர் 11ஆம் தேதி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு குறைபாட்டால் ஏற்பட்ட தாமதங்கள் வெறும் ஒரு விழுக்காடு மட்டுமே என்றும் அரசாங்க முடக்கத்திற்கு முன்பு சராசரியாக 5 விழுக்காடாக அது இருந்தது என்றும் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது.

