புதுடெல்லி: உலகப் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவரான கௌதம் அதானிமீது லஞ்சம் வழங்க முயன்றதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டு அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் ஒப்பந்தம் ஒன்றுடன் தொடர்புடையது என அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் சனிக்கிழமையன்று (நவம்பர் 23) தெரிவித்தார்.
அதானி குழுமத்தைச் சேர்ந்த மற்ற எந்த நிறுவனத்துக்கும் இக்குற்றச்சாட்டில் தொடர்பில்லை என அவர் மேலும் கூறினார்.
சூரிய எரிசக்தி தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$336 மில்லியன்) அதிகமாக லஞ்சம் கொடுக்க அதானியும் அவருடன் சேர்ந்து எழுவரும் முயற்சித்ததாக நவம்பர் 20ஆம் தேதியன்று செய்திகள் வெளியாகின.
தன்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அதானி, அவை அனைத்தும் ஆதாரமற்றவை எனச் சொன்னார்.
“அதானி குழுமத்தைச் சேர்ந்த 11 நிறுவனங்களில் எந்தவொரு நிறுவனத்தின்மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. மேலும், குழுமத்தின் நிறுவனங்கள் குற்றம் இழைத்ததாக அமெரிக்கா சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கவில்லை,” என அதானி குழுமத்தின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் திரு ஜுகேஷிந்தர் சிங் மறுத்தார்.

