வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சு, புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விசா, மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் விசா ஆகியவை தொடர்பான செயல்முறையை மீண்டும் தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், துணைத் தூதரகங்களுக்கு இதன் தொடர்பில் அது உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை விதித்திருந்தார்.
ஆனால், பாஸ்டனைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி அலிசன் பரோஸ், ஜூன் 5ஆம் தேதி அதிபரின் தடைக்குத் தற்காலிகமாகத் தடை விதித்தார்.
அதையடுத்து, ஜூன் 6ஆம் தேதி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் கையொப்பத்துடன் அமெரிக்கத் தூதரகங்கள், துணைத் தூதரகங்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. நீதிபதியின் தற்காலிகத் தடையை முன்னிட்டு இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு டிரம்ப், தேசியப் பாதுகாப்பு தொடர்பான கவலையை முன்னிட்டுத் தாம் அனைத்துலக மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலத் தடை விதிப்பதாகக் கூறியிருந்தார்.
அந்தப் பல்கலைக்கழத்தின் மீது அதிபர் டிரம்ப் நிர்வாகம் பன்முனைத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கருதப்படுகிறது. பல பில்லியன் டாலர் மானியம் உட்பட இதர நிதியுதவியை நிறுத்தியது, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் வரிவிலக்கை முடிவுக்குக் கொண்டுவரப் பரிந்துரைத்தது போன்றவை அதில் அடங்கும்.
விசா தொடர்பான அண்மைய உத்தரவு குறித்த கேள்விக்குப் பதிலளிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சு மறுத்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தூதரகங்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில், மாணவர் விசா தொடர்பான இதர வழிகாட்டிக் குறிப்புகள் அனைத்தும் தொடர்ந்து நடப்பிலிருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் விண்ணப்பதாரர்கள் இட்ட பதிவுகளைப் பரிசோதிப்பதும் அதில் அடங்கும்.