வெளிநாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு அமெரிக்கா வரி

2 mins read
9035130a-b01a-4128-bda2-a471dafa7c87
ஹாலிவுட் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புத் தளங்களாய் ஆஸ்திரேலியாவும் நியூசிலந்தும் அண்மை ஆண்டுகளில் உருவெடுத்துள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 விழுக்காட்டு வரியை விதிக்கவிருப்பதாக அறிவித்ததை அடுத்து ஆஸ்திரேலியாவும் நியூசிலந்தும் திரைப்பட நிறுவனங்களுக்காக வாதாடப்போவதாகத் தெரிவித்துள்ளன.

ஹாலிவுட் திரைப்படங்களுக்கான பிரபல படப்பிடிப்புத் தளங்களாய் ஆஸ்திரேலியாவும் நியூசிலந்தும் அண்மை ஆண்டுகளில் உருவெடுத்துள்ளன.

தயாரிப்பாளர்களை ஈர்க்க இதர நாடுகள் சலுகைகள் வழங்குவதால் அது சாத்தியமானது என்று திரு டிரம்ப் தமது ட்ருத் சோ‌ஷியல் தளத்தில் பதிவிட்டார். அதனால் அமெரிக்கத் திரைப்படத் துறை துரிதமாக சாகிறது என்று அவர் சாடினார்.

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டுப் பின் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து திரைப்படங்கள் மீதும் 100 விழுக்காட்டு வரியை உடனடியாக விதிப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்கும்படி வர்த்தக அமைச்சு உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளுக்குத் திரு டிரம்ப் உத்தரவிடுவதாகவும் கூறினார்.

திரைப்பட உருவாக்கம், தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றை ஆதரிக்க நிதி வழங்கும் ‘ஸ்கீரின் ஆஸ்திரேலியா’ (Screen Australia) அரசாங்க அமைப்பிடம் வரிகள் பற்றி பேசியதாக ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர், டோனி பர்க் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் திரைப்படத் துறையின் உரிமைக்காக நாங்கள் நிச்சயமாக ஆதரவளிப்போம் என்பது குறித்து யாரும் சந்தேகப்படக்கூடாது என்று திரு பர்க் தமது அறிக்கையில் குறிப்பிட்டார். அமெரிக்கா முன்வைக்கவிருக்கும் வரிகள் குறித்த கூடுதல் விவரங்களைப் பெற அரசாங்கம் காத்திருப்பதாக நியூசிலந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்ஸன் சொன்னார்.

“உண்மையில் என்ன வருகிறது என்பதைப் பார்க்கவேண்டும். ஆனால், திரைப்படத் துறைக்கு நாங்கள் வாதாடுவோம்,” என்று திரு லக்ஸன் சொன்னார்.

2020ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி ஆஸ்திரேலிய திரைப்பட, தொலைக்காட்சித் துறையின் மதிப்பு 4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்.

நியூசிலந்தில் திரைப்பட துறை ஆண்டுதோறும் 3.5 பில்லியன் நியூசிலந்து டாலர் ஈட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்