அமெரிக்கா: இஸ்ரேலியத் தூதரக ஊழியர் இருவர் சுட்டுக் கொலை

3 mins read
3c415d06-307a-409d-9c46-a5c18c2be56a
துப்பாக்கியால் சுடப்பட்டோர் சாரா (இடது), யாரோன் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம் என்று தெரிவித்துள்ளது. - படம்: அமெரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதரகம்
multi-img1 of 2

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள யூத அரும்பொருளகத்திற்கு வெளியே இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேப்பிட்டல் யூத அரும்பொருளகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியபோது ஆடவர் ஒருவரும் பெண்மணி ஒருவரும் சுடப்பட்டதாகக் கூறிய தகவல் அறிந்த வட்டாரம், அவர்கள் குறிவைக்கப்பட்டதைப் போல் தென்படுவதாகக் குறிப்பிட்டனர்.

ஏராளமான சுற்றுலா தலங்களுடன் அரும்பொருளகங்கள், மத்திய புலனாய்வுப் பிரிவின் வா‌ஷிங்டன் அலுவலகம் உள்ளிட்ட அரசாங்கக் கட்டடங்கள் உள்ள வட்டாரத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 9.05க்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நேர்ந்த சமயத்தில் இஸ்ரேலியத் தூதரகத்திலிருந்து பல ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

காவல்துறை அதிகாரிகள் நிச்சயம் கொலை செய்தவரைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார் இஸ்ரேலியத் தூதர்.
காவல்துறை அதிகாரிகள் நிச்சயம் கொலை செய்தவரைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார் இஸ்ரேலியத் தூதர். - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் துப்பாக்கிச்சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்தார். யூதர்களின்மீதான வெறுப்பால் அது நடந்திருக்கும் என்றார் அவர்.

“யூதர் வெறுப்பால் நிகழ்ந்த இதுபோன்ற கொலைகள் இப்போதே முடிவுக்கு வரவேண்டும். அமெரிக்காவில் வெறுப்புக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை,” என்று டுருத் சோ‌‌‌ஷியல் சமூகத் தளத்தில் அவர் பதிவிட்டார்.

மாண்டோரின் குடும்பத்துக்கும் திரு டிரம்ப் தமது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

“வா‌ஷிங்டன் டி.சியில் உள்ள இஸ்ரேலிய அரும்பொருளகத்தில் இரண்டு இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் இறக்கமின்றி இன்றிரவு கொல்லப்பட்டனர்,” என்று அமெரிக்க உள்துறை அமைச்சர் கிறிஸ்டி நோயெம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“மாண்டோரின் குடும்பங்களுக்கு வேண்டிக்கொள்ளுங்கள். துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவரை நீதிக்கு முன் நிறுத்துவோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கான இஸ்ரேலியத் தூதர், சம்பவத்தை, யூதர்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்று சாடினார்.

“அரசதந்திரிகளையும் யூதச் சமூகத்தையும் தாக்குவது எல்லையை மீறும் செயல்,” என்று இஸ்ரேலியத் தூதர் டேனி டெனன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்தக் குற்றச் செயலுக்குப் பொறுப்பானவர்கள்மீது அமெரிக்க அதிகாரிகள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தின்போது இஸ்ரேலியத் தூதர் அரும்பொருளக நிகழ்ச்சியில் இல்லை.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து வா‌ஷிங்டன் டி.சியில் உள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டன.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து வா‌ஷிங்டன் டி.சியில் உள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

இந்நிலையில், இலாயஸ் ரோட்ரிகஸ் என்ற ஆடவரைத் துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான சந்தேக நபர் என்று தெரிவித்துள்ளனர்.

சிக்காகோவைச் சேர்ந்த அந்த 30 வயது ஆடவர், சம்பவ இடத்தில் அரும்பொருள்கத்துக்கு வெளியே முன்னும் பின்னும் நடந்துகொண்டிருக்க காணப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

நால்வர் அடங்கிய குழுவை அணுகிய ஆடவர் துப்பாக்கியை நீட்டி இருவரைச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

ரோட்ரிகஸ் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூகத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வா‌ஷிங்டன் டி.சி மேயர் குறிப்பிட்டார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ரோட்ரிகஸ் ‘பாலஸ்தீனை விடுதலை செய்’ என்று தொடர்ந்து முழக்கமிட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் செல்லும் பாதையை மூடினர்.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் செல்லும் பாதையை மூடினர். - படம்: இபிஏ

இதற்கிடையே, சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரும் கூடிய விரைவில் நிச்சயம் செய்துகொள்ளவிருந்த இணை என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேலியத் தூதர் யெகியேல் லெய்ட்டர் கூறினார்.

“ஜெருசலத்தில் வைத்து காதலியிடம் திருமணம் பற்றி சொல்வதற்காக அந்த இளையர் இந்த வாரம் மோதிரம் ஒன்றை வாங்கியதையும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய அதிபர் ஐசேக் ஹெர்சோக், துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்ததாகச் சொன்னார்.

தூதரகத்தில் உள்ள ஊழியர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அமெரிக்காவில் உள்ள யூத சமூகத்துடன் துணை நிற்பதாகவும் அவர் கூறினார்.

- படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்