முரசுக்களம்: மக்களாட்சிக்கு கருப்புப் புள்ளி வைக்கிறதா வெள்ளை மாளிகை: கலக்கமுறும் உலக நாடுகள்

வெனிசுவேலாவில் அமெரிக்கா: அனைத்துலக நல்லுறவுக்கு வந்த சோதனை

3 mins read
9be7d112-daf4-4c42-9f92-33b3bf2cd602
அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் நுழைய வெனிசுவேலா முன்னாள் அதிபர் நிக்கலாஸ் மதுரோ (இடது) தான் காரணம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த சூழலில் அமெரிக்கப் படைகள் மதுரோவை அதிரடியாகக் கைது செய்து அவரது ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன. - படம்: ஏபிசி நியூஸ்
வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்துலக உறவுகளுக்கு ஏற்பட்டுள்ள சத்திய சோதனையாகக் கருதப்படுகிறது.
வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்துலக உறவுகளுக்கு ஏற்பட்டுள்ள சத்திய சோதனையாகக் கருதப்படுகிறது. - கோப்புப் படம்.

அமெரிக்க அதிபர் நினைத்தால் எந்த நாட்டையும் கைப்பற்றலாம்; எல்லா நாட்டின் வளத்தையும் வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரலாம் என்ற போக்கில்தான் கடந்த சில நாள்களாக உலக அரசியல் களம் காட்சியளிக்கிறது.

அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் நுழைய வெனிசுவேலா முன்னாள் அதிபர் நிக்கலாஸ் மதுரோதான் காரணம் எனத் திரு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த  சூழலில், புத்தாண்டு பிறந்த 72 மணிநேரத்தில், ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்கப் படைகள் மதுரோவை கைது செய்தன.

மதுரோ நாடுகடத்தப்பட்டு அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்பட்டார். வெனிசுவேலாவில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் மதுரோ. மதுரோவின் ஆட்சி முடிவுக்கு வரப்போவதாக எந்தவொரு அறிகுறியும் கடந்த ஆண்டு இறுதிவரை தென்படவில்லை.

இந்நிலையில்தான் அமெரிக்க அதிபர் துல்லியமாகச் செயல்திட்டம் வகுத்து, தம் ஒற்றை உத்தரவால், மொத்த வெனிசுவேலாவையும் இருளில் மூழ்கச் செய்து கைது நடவடிக்கையை நிறைவேற்றினார்.

அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள மதுரோ, அவரது மனைவி சீலியா ஃப்ளோரஸ் இருவரும் முதன்முறையாக ஜனவரி 5 அன்று மென்ஹாட்டன் மத்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

பேருந்து ஓட்டுநர், தொழிற்சங்கத் தலைவர் என்ற அடையாளத்துடன் அரசியல்வாதியாக மாறிப்போன மதுரோ, 63, ‘‘நான் நிரபராதி. எந்தவொரு குற்றமும் புரியவில்லை. நான் கண்ணியமான நபர். அமெரிக்கா சுமத்தியுள்ள போதைப்பொருள் சார்ந்த எந்தவொரு குற்றச்செயலிலும் நான் ஈடுபடவில்லை,’’ என்று கூறினார்.

எனினும் மதுரோவின் வாதத்தை மாவட்ட நீதிபதி நிராகரித்துவிட்டார். இவ்வழக்கு மீண்டும் மார்ச் மாதம் விசாரணைக்கு வருகிறது.

அனைத்துலக ஒழுங்குமுறைகள், நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம், வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்ட எந்தவொரு கட்டமைப்பிற்குள்ளும் கட்டுப்படாமல் ‘‘வெனிசுவேலா நாட்டை நாங்களே ஆளப்போகிறோம்; இனி அங்கே உள்ள எண்ணெய்யை வர்த்தகம் செய்வதிலிருந்து, அதை யாருக்கு விற்பனை செய்யப்போகிறோம் என்பது வரை அமெரிக்காவே முடிவு செய்யும்,’’ என்று திரு டிரம்ப் உலக அரங்கில் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். 

இதனால் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கோட்டையைத் தன்வசம் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா. இதனால் எண்ணெய் விற்பனையில் இனி அமெரிக்கா வைப்பதுதான் சட்டமாக மாறுமா என்ற திகைப்பில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள்கூட மூழ்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்தான், விரைவில் கிரீன்லாந்தையும் கையகப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

உலக அரங்கில் தன்னிச்சையாகச் செயல்படும் அமெரிக்காவின் போக்கு கவலைக்குரியது, அதன் தாக்கம் நீண்டகாலம் எதிரொலிக்கும்; குறிப்பாக, சிறிய நாடுகள் உள்பட உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கிடையேயான நட்புறவில் அவை பின்னடைவை ஏற்படுத்தும் என்று சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, இந்தோனீசியா உள்ளிட்ட பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. 

இதனைக் கருத்தில்கொண்டால், வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்துலக உறவுகளுக்கு ஏற்பட்டுள்ள சத்திய சோதனை என்றே சொல்ல வேண்டும்.

ஒருபுறம், வெனிசுவேலாவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே தமது நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக அமெரிக்கா வாதிடுகிறது.

ஆனால் மறுபுறம் வெனிசுவேலா நாட்டு கொள்கைகள், வர்த்தக ஒப்பந்தங்கள் சார்பாக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வெனிசுவேலாவில் கடுமையான மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது எனும் கொள்கையை உறுதிப்படுத்துகிறது ஐநா சபை.

எனினும், இவற்றிற்கெல்லாம் அப்பால் அரங்கேறும் அமெரிக்காவின் செயல்கள் மூன்றாம் உலகப் போருக்கான அனுமதிச் சீட்டை ஆயத்தப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு இடங்கொடுக்கிறது.

மேலும் இது ஆசிய நாடுகளின் பொருளியலையும் ஆட்டிப்படைக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்நிலையில் அமைதிக்கான ஒப்பந்தங்களை ஏட்டில் வடிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அமைதிக்கு நல்வடிவம் கொடுத்தால் நன்று.

அவ்வகையில் மோதல்களுக்கு ஆக்ககரமான தீர்வால்தான் தரணி நலம் பெறும், நாடு செழிப்புறும். 

குறிப்புச் சொற்கள்