தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலநடுக்கம் உருக்குலைத்த மியன்மாருக்கு அமெரிக்கா உதவும்: அதிபர் டிரம்ப்

1 mins read
f782a038-48e7-4807-9600-c9c1e678c6f1
தாய்லாந்தின் பேங்காக்கில் இடிந்து விழுந்த கட்டடத்தில் இடம்பெறும் மீட்புப் பணிகள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வா‌ஷிங்டன்: வலுவான நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மியன்மாருக்கு உதவிக்கரம் நீட்டும் என்று அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். மியன்மாருக்கு முடிந்ததைச் செய்யும்படி அந்நாட்டு ராணுவம் இதர நாடுகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

மியன்மார் ராணுவத் தலைவரின் வேண்டுக்கோளுக்கு இணங்க அமெரிக்கா உதவுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்குத் திரு டிரம்ப் பதிலளித்தார்.

“நிலநடுக்கத்தின் தாக்கம் மிக மோசமானதாக உள்ளது. அமெரிக்கா உதவிசெய்யும். மியன்மாருடன் ஏற்கெனவே பேசிவிட்டோம்,” என்று திரு டிரம்ப் கூறினார்.

மியன்மாரையும் தாய்லாந்தையும் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) 7.7 ரிக்டர் அளவில் உள்ள வலுவான நிலநடுக்கம் உலுக்கியதில் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.

மியன்மாரில் அதிகாரத்தைப் கைப்பற்றிய ராணுவத்தால் 4 ஆண்டு உள்நாட்டுப் போர் மூண்டது. அதன் விளைவாக உள்கட்டமைப்பு, சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு போன்றவை சீர்குலைந்ததால் பேரிடரைக் கையாள முடியாத நிலையில் மியன்மார் தவிக்கிறது.

அண்மை ஆண்டுகளில் அரசியல் கைதிகளை விடுவிக்கும்படியும் வன்முறையைக் குறைத்துக்கொள்ளும்படியும் மியன்மார் ராணுவத்தை அமெரிக்கா வலியுறுத்திவருகிறது.

இதற்கிடையே, மியன்மார் ராணுவம் முக்கிய நட்பு நாடான ர‌ஷ்யாவுடன் உறவை வலுப்படுத்த முற்பட்டுள்ளது. ராணுவத் தலைவர் மின் அங் லைன் ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை இம்மாதத் தொடக்கத்தில் மாஸ்கோவில் சந்தித்தார்.

மியன்மாரில் ஒரு சிறிய அணுவாலையைக் கட்டுவதற்கான திட்டம்பற்றி மியன்மாரும் ர‌ஷ்யாவும் கலந்துரையாடிவருகின்றன.

குறிப்புச் சொற்கள்