கோலாலம்பூர்: தேசிய ஒற்றுமை என்பது இனி ஒரு விருப்பத் தெரிவன்று, மாறாக நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதிசெய்வதற்கான ஒரு முக்கியத் தேவை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
ஒற்றுமை என்பது நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்றும் மலேசியாவின் முன்னேற்றத்திற்கு இது ஒரு தூண்டுகோலாகும் என்றும் அவர் கூறினார்.
“நாம் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே மலேசியா வலுவாக இருக்கும்.
“நிலைத்தன்மையும் தேசிய ஒற்றுமையுமே முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தகுதிகள். வேகமாக மாறிவரும், சவால்கள் நிறைந்த உலகில் ஒற்றுமை என்பது ஒரு தெரிவன்று, அது அவசியமான ஒன்று,” என்று அவர் எடுத்துரைத்தார்.
இஸ்தானா நெகாராவில் திங்கட்கிழமை (ஜூன் 2) மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து கூட்டரசு விருதுகள், நட்சத்திரங்கள், பதக்கங்கள் வழங்கும் சடங்கில் தாம் ஆற்றிய வாழ்த்துரையில் பிரதமர் அன்வார் இவ்வாறு கூறினார்.
மலேசிய அரசி ராஜா ஸரீத் சோஃபியா, பிரதமர் அன்வாரின் மனைவி டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், நாடாளுமன்றக் கீழவை நாயகர் ஜோகாரி அப்துல், மேலவைத் தலைவர் அவாங் பேமீ அவாங் அலி பாஷா ஆகியோர் சடங்கில் கலந்துகொண்டனர்.
தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்ஸிலும் அமைச்சரவை உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாமன்னரின் ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் கோட்பாடுகளின் அடிப்படையில் விரிவான சீர்திருத்தத்தைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.
“பொருள்சார் வளர்ச்சி மட்டும் நிச்சயமாக போதுமானதன்று. உண்மையில் அது மனித பண்புநலன்கள், சமூக நீதி, மனிதநேயம் ஆகியவற்றுடன் சமநிலையில் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
உள்கட்டமைப்பு, பொது வசதிகளின் வளர்ச்சி, ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்பு (இசிஆர்எல்), ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் போன்ற பெருந்திட்டங்களுடன் நின்றுவிடக்கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.
மாறாக, பள்ளிகள், மருத்துவமனைகள், போக்குவரத்துக் கட்டமைப்புகள் போன்ற அத்தியாவசியச் சேவைகளை மேம்படுத்துவதிலும் அதே அளவு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.