செந்தோசாவில் உள்ள யுனிவர்சல் ஸ்டூடியோவின் சாகசக் கலைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் என்று மே 26ஆம் தேதி ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா தெரிவித்தது.
இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில், “வாட்டர்வேர்ல்ட்’ கலைஞரின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம். எங்களுடைய அனுதாபத்தை அவரது குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியிருக்கிறோம். எங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் சக கலைஞர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவின் நிர்வாகிகளில் ஒருவரான லேனா லீ தெரிவித்தார்.
மே 19ஆம் தேதி சம்பவத்தில் அந்தக் கலைஞருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் எப்போது இறந்தார் என்பதையோ அல்லது அவருக்கு எத்தகைய அவசர உதவி தேவைப்பட்டது என்பதையோ மே 26ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
அவர் சிரமப்படுவதை அறிந்த சக ஊழியர்கள் முதலுதவிகளை செய்தனர் என்று அதன் பேச்சாளர் ஒருவர் மே 22ஆம் தேதி ஊடகங்களுக்கு அளித்த பதிலில் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் உதவியுடன் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில், எண் 30 செந்தோசா கேட்வேயிலிருந்து காலை 10.35 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அந்த முகவரியில்தான் யுனிவர்சல் ஸ்டூடியோ சிங்கப்பூர் செயல்படுகிறது.
வாட்டர்வேர்ல்ட்டுக்காக நியமிக்கப்பட்ட நிறுவனம் அவரை வேலைக்கு அமர்த்தியிருந்தது.
“பாதுகாப்பே எங்களுடைய முன்னுரிமை, பாதுகாப்பு நடைமுறைகளையொட்டி பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. கலைஞரின் நிறுவனத்துடன் சேர்ந்து சம்பவத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து வருகிறோம்,” என்று ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா மேலும் தெரிவித்தது.

