துருக்கியக் கடற்பகுதியில் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்; ரஷ்யக் கப்பல் புகார்

1 mins read
6226566a-6e56-4c0c-b500-41d7edff62f4
கருங்கடலில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று துருக்கிய அதிபர் ரிசெப் தயீப் எர்துவான் தெரிவித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்தான்பூல்: துருக்கியக் கடலோரப் பகுதியில் தன்மீது ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யக் கப்பல் புகார் அளித்துள்ளதாகத் துருக்கியக் கடல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யக் கப்பல் தெரிவித்தது.

தாக்கப்பட்டபோதிலும் அக்கப்பல் உதவி கேட்டு அழைக்கவில்லை என்றும் துருக்கியின் சினோப் துறைமுகத்தை நோக்கி அது விரைந்தது என்றும் துருக்கிய கடல்துறை விவகாரங்கள் ஆணையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

தாக்குதல் நடத்தியோர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பாதிக்கப்பட்ட கப்பல் ரஷ்யாவிலிருந்து ஜார்ஜியாவுக்குப் பயணம் செய்துகொண்டிருந்ததாக டிரிபேக்கா கப்பல் நிறுவனம் தெரிவித்தது.

சூரியகாந்தி எண்ணெய் ஏற்றிக்கொண்டு கப்பல் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எவ்வித உதவியுமின்றி அக்கப்பல் சினோப் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகத் துருக்கியக் கடல்துறை ஆணையம் கூறியது.

கருங்கடலில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று துருக்கிய அதிபர் ரிசெப் தயீப் எர்துவான் திங்கட்கிழமை (டிசம்பர் 1) தெரிவித்திருந்தார்.

அவ்வாறு தாக்குதல் நடத்துவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்