ஆஸ்திரேலிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: எண்ணெய் விநியோகம் பாதிப்பு

இரவு முழுவதும் தீ எரிந்ததால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்

ஆஸ்திரேலிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: எண்ணெய் விநியோகம் பாதிப்பு

2 mins read
f5d2752e-0ab8-4094-987d-426c8c6843b6
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே, கீலாங்கில் உள்ள ‘விவா எனர்ஜி’ (Viva Energy) சுத்திகரிப்பு நிலையம் புதன்கிழமை (ஏப்ரல் 15) நள்ளிரவுவாக்கில் வெடிப்புச் சத்தத்துடன் தீப்பிடித்தது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகிலுள்ள முக்கியமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, அந்நாட்டின் பெட்ரோல் விநியோகத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

விக்டோரியா மாநிலத்தின் 50 விழுக்காட்டு எரிபொருள் தேவையையும் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் 10 விழுக்காட்டுத் தேவையையும் நிறைவேற்றும் ‘விவா எனர்ஜி’ சுத்திகரிப்பு நிலையம் புதன்கிழமை (ஏப்ரல் 15) நள்ளிரவுவாக்கில் தீப்பிடித்தது.

நல்வாய்ப்பாக தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், அப்பகுதியில் காற்றின் தரம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஏப்ரல் 15) எடுக்கப்பட்ட இப்படத்தில் ‘விவா எனர்ஜி’ (Viva Energy) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புகை வெளிவந்தவண்ணமுள்ளது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், அப்பகுதியில் காற்றின் தரம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (ஏப்ரல் 15) எடுக்கப்பட்ட இப்படத்தில் ‘விவா எனர்ஜி’ (Viva Energy) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புகை வெளிவந்தவண்ணமுள்ளது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், அப்பகுதியில் காற்றின் தரம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஈரான் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் நெருக்கடி நிலவும் சூழலில், இந்த விபத்து, “தவறான நேரத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு,” என்று அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ் போவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவில் டீசல் விலை இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் மக்கள் பீதியில் எரிபொருளை வாங்கிச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.

இயந்திரக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்புக் கருதி பெட்ரோல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்றும் நிலைமை சீரான பின்னரே உற்பத்தி தொடங்கும் என்றும் ‘விவா எனர்ஜி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை (ஏப்ரல் 15) மேலிருந்து எடுக்கப்பட்ட படத்தில் ‘விவா எனர்ஜி’ (Viva Energy) சுத்திகரிப்பு நிலையம். இரவு முழுவதும் தீ எரிந்ததால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 15) மேலிருந்து எடுக்கப்பட்ட படத்தில் ‘விவா எனர்ஜி’ (Viva Energy) சுத்திகரிப்பு நிலையம். இரவு முழுவதும் தீ எரிந்ததால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

அந்த நிலையத்தில் நாளொன்றுக்கு 120,000 பேரல் எண்ணெய் உற்பத்தியாகிறது. 1,100க்கும் மேற்பட்டோர் அங்குப் பணிபுரிகின்றனர்.

சிங்கப்பூர், தென்கொரியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா எரிபொருளை இறக்குமதி செய்வதால், நீண்ட காலப் பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் கருதினாலும், தற்காலிகத் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் தவிர்க்க முடியாததாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்