தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானில் ஜூலை மாதம் வரலாறு காணாத வெப்பம்

1 mins read
86561f75-3d0b-47ce-9e16-469ce891a7d9
தோக்கியோவில் ஜூலை 24ஆம் தேதி கடும் வெப்பத்திற்கு இடையே நீர்ச்சாரலில் இளைப்பாறும் முதியவர். - படம்: இபிஏ

தோக்கியோ: ஜப்பான் ஆக வெப்பமான ஜூலை மாதத்தை இவ்வாண்டு ஜூலையில் சந்தித்தது.

1898ஆம் ஆண்டு வானிலை குறித்த பதிவுகள் தொடங்கப்பட்ட பிறகு இவ்வாண்டு ஜூலையே ஆக வெப்பமான ஜூலை மாதம். வரும் மாதத்தில் வெப்பம் மேலும் கடுமையாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களால் பருவநிலைக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதன் விளைவாய் உலகெங்கும் வெப்பக்காற்று மேலும் மேலும் கடுமையாவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜப்பானும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

ஜூலையின் சராசரி வெப்பநிலை, 1991ஆம் ஆண்டுக்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த சராசரியைக் காட்டிலும் அதிகம். அந்தக் காலத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதச் சராசரி வெப்பநிலை 2.89 டிகிரி செல்சியஸ் கூடியது. ஜப்பானிய வானிலை ஆய்வகம் அந்தத் தகவல்களை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிட்டது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜூலை மாத வெப்பம் சாதனை அளவை எட்டியுள்ளது.

ஜூலை 30ஆம் தேதி மேற்கு வட்டாரமான ஹியோகோவில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டது. அன்றைய வெப்பநிலை 41.2 டிகிரி செல்சியசாகப் பதிவானது.

ஜூலை மாதம் ஜப்பானின் பல பகுதிகளில் மழை அவ்வளவாகப் பெய்யவில்லை. ஜப்பானியக் கடலை நோக்கிய வட பகுதிகளில் மிகவும் குறைவான மழைப்பொழிவே பதிவானது.

மேற்குப் பகுதிகளிலும் வழக்கத்தைவிட மூன்று வாரங்கள் முன்கூட்டியே மழைக்காலம் முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்