தென்கொரியாவில் வரலாறு காணாத வெப்பம் பதிவு

தென்கொரியாவில் வரலாறு காணாத வெப்பம் பதிவு

2 mins read
7232b92f-d84f-4ba7-8643-0bfb89132db7
தென்கொரியாவின் பெரும்பாலான பகுதிகள் தீவிர அனல் காற்று எச்சரிக்கை வளையத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சோல்: தென்கொரியாவில் நூற்றாண்டுக்கும் அதிகமான வானிலை வரலாற்றுப் பதிவுகளில் இதுவரை இல்லாத அளவாகப் புதிய உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் அரசு வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் தென்கிழக்கு நகரமான யாங்சானில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.26 மணியளவில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகத் தென்கொரிய வானிலை ஆய்வு மையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

தீவிரமடைந்துவரும் அனல் காற்றின் முக்கிய மையப் பகுதியாகத் திகழும் யாங்சானில், ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 2) தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளது.

தற்போது தென்கொரியாவின் பெரும்பாலான பகுதிகள் தீவிர அனல் காற்று எச்சரிக்கை வளையத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பல நகரங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசின் உயர் நிலையை எட்டியுள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலையைச் சிறப்பாகச் சமாளிக்கும் பொருட்டு, 2026ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அவசரகால அனல் காற்று எச்சரிக்கை நடவடிக்கையின்கீழ், 20க்கும் மேற்பட்ட உள்ளூர் வட்டாரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் உணரப்படும் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசை எட்டும் எனக் கணிக்கப்படும்போதோ அல்லது உண்மையான வெப்பநிலை ஒருநாளுக்கு 39 டிகிரி செல்சியசாக இருக்கும்போதோ இந்த அவசரகால எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

தென்கொரியாவில் சராசரி வருடாந்திர அனல் காற்று நாள்களின் எண்ணிக்கை 1970களில் வெறும் எட்டாக இருந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அது இருமடங்குக்கும் மேலாக அதிகரித்து 19ஆக உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.

அதிகபட்ச வெப்பநிலை குறைந்தபட்சம் 33 டிகிரி செல்சியசை எட்டும் நாள் அனல் காற்று நாளாகவும் இரவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாகவோ அதற்கு மேலாகவோ நீடிக்கும் இரவு வெப்பமண்டல இரவாகவும் வரையறுக்கப்படுகிறது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவாகவே அனல் காற்று போன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன என்றும் அவற்றின் தீவிரத்தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்