ஜப்பானில் இரட்டையர் பிறப்பு வரலாறு காணாத அளவு அதிகரிப்பு

ஜப்பானில் இரட்டையர் பிறப்பு வரலாறு காணாத அளவு அதிகரிப்பு

2 mins read
cfb5ba23-83bd-4944-b7b4-15d7b2505188
ஜப்பானில் இரட்டையர் பிறப்பு அதிகரித்துள்ளது. - படம்: அடோப் ஸ்டாக்

தோக்கியோ: ஜப்பானில் செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சைக்கான பொதுச் சுகாதாரக் காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே ஆண்டில் அதிக இரட்டையர்கள் பிறந்துள்ளனர். அந்த எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் 4,354ஆக அதிகரித்துள்ளது ஓர் ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 36 விழுக்காடு அதிகமாகும்.

காப்புறுதித் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட சில முறைகளில் மட்டுமே சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்பதால் அதற்குள்ளாக எப்படியாவது குழந்தைப்பேறு பெற்றுவிட வேண்டும் என்ற அவசரத்தில் பெண்கள் தங்களின் கருப்பையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருமுட்டைகளை செலுத்திக் கொள்வதே இந்த அபரிமித உயர்வுக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

இருப்பினும், இரட்டைக் குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் ஒரே நேரத்தில் உருவாவது கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயமுள்ளது.

இதனால், கொள்கை அளவில் ஒரு நேரத்தில் ஒரு கருமுட்டையை மட்டுமே செலுத்த வேண்டும் என்று ஜப்பான் மகப்பேறு, மகளிர் மருத்துவச் சங்கம் பரிந்துரைக்கிறது.

ஜப்பானின் பொதுக்காப்புறுதி முறையின்படி, கருத்தரிப்புச் சிகிச்சையைத் தொடங்கும்போது 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு அதிகபட்சமாக 6 முறையும், 40 முதல் 42 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 3 முறையும் மட்டுமே காப்புறுதிச் சலுகை வழங்கப்படுகிறது.

டோஹோ பல்கலைக்கழக விரிவுரையாளர் அயுமு இடோ, “அபாயகரமான கர்ப்பங்களால் மகப்பேறு மருத்துவக் கட்டமைப்பிற்கு ஏற்படும் கூடுதல் சுமையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய காப்புறுதி முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.

பொதுவாகச் செயற்கைக் கருத்தரிப்பு முறையில், கர்ப்பமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்க ஒரே நேரத்தில் பல கருமுட்டைகள் செலுத்தப்படுவதுண்டு. இதனால் பல்லுயிர் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு வரை இத்தகைய கர்ப்பங்களின் விகிதம் 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது.

இதையடுத்து, கடந்த 2008ஆம் ஆண்டில், ஒரே நேரத்தில் ஒரு கருமுட்டையை மட்டுமே செலுத்த வேண்டும் என்று மருத்துவச் சங்கம் பரிந்துரைத்தது. எனினும், 35 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும், இரண்டு முறைக்கும் மேல் முயன்றும் கர்ப்பமடையத் தவறியவர்களுக்கும் மட்டும் இரண்டு கருமுட்டைகளைச் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக, பல்லுயிர் கர்ப்பமாவது குறைந்து, 2014 முதல் 3 விழுக்காடாகவே நீடித்தது. ஆனால், கருத்தரிப்புச் சிகிச்சைக்குக் காப்புறுதிச் சலுகை நீட்டிக்கப்பட்ட அடுத்த ஆண்டே, அதாவது 2023ல், இந்த விகிதம் மீண்டும் 3.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று மருத்துவச் சங்கத்தின் ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்த ஆய்வில், பெரும்பாலான சம்பவங்களில் இரட்டைக் குழந்தைகளாக இருந்தபோதிலும் 69 சம்பவங்களில் மூன்று குழந்தைகளும் ஆறு சம்பவங்களில் நான்கு குழந்தைகளும் உருவானது கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்