தோக்கியோ: ஜப்பானில் 2026ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவில் வெளிநாட்டவர் இருப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் வெளிநாட்டவர் தங்குவதை விரும்பாத போக்கு அதிகரித்துவரும் நிலையிலும் இந்தச் சூழல் உருவாகியுள்ளது. மூப்படைதல், சுருங்கும் மக்கள்தொகை ஆகிய பிரச்சினைகளை ஜப்பான் எதிர்நோக்கிவருகிறது.
4.28 மில்லியன் வெளிநாட்டவர்
கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி ஜப்பானில் வெளிநாட்டவர் 4.28 மில்லியன் பேர் தங்கியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. குறுகிய காலத்துக்கு அந்நாட்டுச் செல்வோர் இந்த எண்ணிக்கையில் அடங்கமாட்டார்கள்.
ஜப்பானின் குடிநுழைவுச் சேவைகள் அமைப்பு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) இத்தகவலை வெளியிட்டது.
சென்ற ஆண்டு இறுதியில் பதிவான வெளிநாட்டவர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் எண்ணிக்கை 156,000 அதிகமாகும். தற்போது ஜப்பானில் தங்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.5 விழுக்காடு என்று அரசாங்கக் கணிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது.
ஊழியர் பற்றாக்குறை
திறமையான நிபுணத்துவ ஊழியர்கள் முதல் சேவைத் துறை ஊழியர்கள் வரை ஜப்பான் எல்லா நிலைகளிலும் ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்குவாக குடிநுழைவு விவகார வல்லுநர் தொஷிஹிரோ மெஞ்சு, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“ஆண்டுதோறும் ஜப்பானின் மக்கள்தொகை 900,000க்குமேல் குறைந்துவரும் நிலையில் வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை,” என்று கன்சாய் அனைத்துலகக் கல்விப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றும் (visiting professor) பேராசிரியர் மெஞ்சு கூறினார்.
பிரச்சினையைக் கையாள அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு, கூடுதல் எண்ணிக்கையில் பெண்கள் மற்றும் வயதானவர்களை ஊழியரணியில் சேர்த்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலும் அவற்றால் குறைபாடுகளை முழுமையாகச் சரிசெய்ய முடியாது என்றும் அவர் சுட்டினார்.
வெளிநாட்டவருக்கு ஆதரவளிக்க முழுமையான கொள்கையை வரையுமாறு ஜப்பானிய வர்த்தகங்கள், அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுவருகின்றன. ஆனால், வெளிநாட்டவருக்கு எதிரான மனப்பான்மை மக்களிடையே அதிகரிப்பதால் பிரதமர் சானே தக்காய்ச்சி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளார்.
கடுமையாக்கப்பட்ட விதிமுறைகள்
அக்டோபரில் ஜப்பானிய நிரந்தரவாசம் பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. அதன்படி, அந்தத் தகுதியை ஒருவர் பெற அவரின் வருடாந்தர சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது; மேலும் அவர் சரளமாக ஜப்பானிய மொழியைப் பேசவேண்டும்.
சென்ற ஆண்டு நடந்த ஜப்பானிய நாடாளுமன்றத்துக்கான மேலவைத் தேர்தலில், குடிநுழைவை எதிர்க்கும் சன்செய்ட்டோ கட்சி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டது.
புதிய விதிமுறைகள், குடிநுழைவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கக்கூடும் என்று பேராசிரியர் மெஞ்சு குறிப்பிட்டார். ஜப்பானில் வாழும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 300,000 அதிகரித்தது. அதற்கு முந்தைய ஆண்டில் எண்ணிக்கை 360,000ஆக இருந்தது.
எனினும், ஊழியர் பற்றாக்குறையால் 2040களில் ஜப்பானில் உள்ள வெளிநாட்டவரின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தொடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகப் பேராசிரியர் மெஞ்சு குறிப்பிட்டார்.
