அமெரிக்க விமான நிலையங்களில் வரலாறு காணாத அளவில் காத்திருப்பு நேரம்

அமெரிக்க விமான நிலையங்களில் வரலாறு காணாத அளவில் காத்திருப்பு நேரம்

1 mins read
e20fe33d-7e42-488b-bc27-679b3d823c9d
நியூயார்க்கின் ஜேஎஃப்கே விமான நிலையத்தில் காணப்பட்ட நீண்ட வரிசை. - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் விமான நிலையப் பாதுகாப்பு, மிகுந்த நெருக்குதலை எதிர்நோக்குவதாக அந்நாட்டின் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் (டிஎஸ்ஏ) எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு நிதி வழங்காததால் எழுந்துள்ள, ஊழியர்ப் பற்றாக்குறை, கூடுதல் நேரம் காத்திருக்கவேண்டிய சூழல் போன்ற பிரச்சினைகள் காரணமாக நாடு முழுவதும் சேவை இடையூறுகள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து புதன்கிழமை (மார்ச் 25) அரசியல் தலைவர்களிடம் பேசிய டிஎஸ்ஏ நிர்வாகி ஹா கையன் மெக்நீல், “இதனால் டிஎஸ்ஏ வரலாற்றில் இதுவரை காணப்படாத அளவில் சில வேளைகளில் காத்திருப்பு நேரம் 4.5 மணிநேரத்தைத் தாண்டுகிறது,” என்று தெரிவித்தார்.

அந்த அமைப்பு, நிதி வழங்கப்படாததால் ஏற்கெனவே 480க்கும் அதிகமான போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளை இழந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அட்லான்டா, ஹூஸ்டன், நியூயார்க், உள்ளிட்ட நகரங்களின் விமான நிலையங்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய முனையங்கள், பயணிகள் பெட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் இடங்கள் மட்டுமின்றி நுழைவாயில்களையும் தாண்டி வரிசை நீள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் பயணிகளின் அனுபவங்கள் சில சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. காத்திருப்பு நேரம் குறித்தும் ஏறவேண்டிய விமானங்களில் ஏற முடியாமல் போகக்கூடிய அபாயம் குறித்தும் அவர்கள் பதிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்