பென்சில்வேனியா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழக மாணவி திவ்யா தியாகி, 100 ஆண்டுகளாகத் தீர்வுகாணப்படாத கணிதச் சமன்பாட்டுக்கு விடை கண்டுள்ளார்.
விண்வெளிப் பொறியியலில் முதுநிலைப் பட்டக்கல்வி பயிலும் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
கடினமான அந்தக் கணிதச் சமன்பாட்டை அவர் எளிமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
திவ்யாவின் பங்களிப்பு, காற்றாலை இயந்திரங்களின் வடிவமைப்பில் புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
அவரது ஆய்வுக் கட்டுரையும் கண்டுபிடிப்பும் ‘விண்ட் எனர்ஜி சயின்ஸ்’ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
காற்றாலைகளில் செலவுக் குறைப்பு, உற்பத்தி அதிகரிப்பு ஆகியவற்றுக்குத் தனது ஆய்வுக்கட்டுரை உதவும் என்கிறார் திவ்யா.
இதுகுறித்துக் கூறிய அவரது பேராசியரும் இந்த ஆய்வுக் கட்டுரையை திவ்யாவுடன் இணைந்து எழுதியவருமான டாக்டர் ஸ்வென் ஷ்மிட்ஸ், ‘கிளௌவெர்ட் பிராப்ளம்’ (Glauert problem) எனப்படும் அந்தச் சமன்பாட்டுக்கு விடை காண வேறு சில மாணவர்களும் முயன்றதாகவும் ஆனால் திவ்யா அதில் வெற்றிகண்டதாகவும் கூறினார்.
அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள வகுப்பறைகளில் அது கற்பிக்கப்படும் என்றார் அவர்.

