ஆஸ்டின்: அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலத்திலிருந்து நியூ ஜெர்சிக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் ஆடவர் ஒருவர் திடீரென ஒழுங்கின்றி நடந்துகொண்டார்.
சம்பந்தப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் தகாத வார்த்தைகளை அலறியதோடு கட்டுப்படுத்த முடியாத வகையில் நடந்துகொள்ள ஆரம்பித்தார். இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 3) இரவு நிகழ்ந்தது.
அப்போது வேறு இரு பயணிகள் ஒட்டுநாடா (duct tape) உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அந்த ஆடவரை கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அவ்விமானத்துக்குள் நுழைந்த பிறகு அந்த ஆடவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
சம்பந்தப்பட்ட விமானம் டேலஸ் நகரிலிருந்து நியூவார்க்குக்குச் சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் போல்டிமோர்/வாஷிங்டன் துர்குட் மார்ஷல் அனைத்துலக விமான நிலையத்துக்கு மாற்றிவிடப்பட்டது.
தொந்தரவு இழைத்த ஆடவர் 67 வயது ஆர்த்தர் லுன்டீன் என்று மேரிலண்ட் போக்குவரத்து ஆணையக் காவல்துறை அடையாளம் கண்டது.
அரிசோனா மாநிலத்தின் டக்சன் நகரைச் சேர்ந்த லுன்டீன், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) நீதிமன்றத்தில் முன்னிலையானதாகவும் அதிகாரபூர்வமாக வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் மேரிலண்ட் நீதிமன்றத் தகவல்கள் தெரிவித்தன. தனக்கு வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள அவர் மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


