கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் மானியமில்லா ரோன்95 பெட்ரோலின் விலை 20 காசும் (S$0.06) டீசலின் விலை 10 காசும் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, மானியமில்லா ரோன்95 பெட்ரோல், லிட்டருக்கு 4.07 ரிங்கிட்டிற்கு விற்கப்படும். டீசல் விலை, லிட்டருக்கு 4.97 ரிங்கிட் என உயர்ந்துள்ளது.
அதுபோல், ரோன்97 பெட்ரோல் விலை 15 காசு, அதாவது லிட்டருக்கு 4.85 ரிங்கிட் என உயர்த்தப்படுகிறது.
அண்மை விலையுயர்வு மே 21 முதல் 27 வரை நடப்பில் இருக்கும்.
விலை மாற்றங்களானது தானியக்க விலைநிர்ணய முறைப்படி செய்யப்பட்டுள்ளன என்று மலேசிய நிதியமைச்சு புதன்கிழமை (மே 20) தெரிவித்தது. அம்முறையானது முந்திய வாரத்தின் சராசரி விலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
அதேநேரத்தில், சாபா, சரவாக், லபுவான் பகுதிகளில் பொதுமக்களுக்கும் குறிப்பிட்ட துறைகளுக்குமான எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அங்கு ரோன்95 பெட்ரோல், லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற விலையிலேயே விற்கப்படும்.
அதுபோல், மானியத்துடன் கூடிய டீசல், லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற விலையிலும் பெட்ரோல் லிட்டருக்கு 2.05 ரிங்கிட் என்ற விலையிலும் விற்கப்படும்.
நாட்டின் விநியோக நிலைத்தன்மையைப் பேண உதவும் வகையில், எரிபொருளைத் தொடர்ந்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

